5766. துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
உரை: தோழி! என்னை நோக்கி உடுக்கை போன்ற இடையை யுடைய தலைமகளே, உனக்கு வந்துள்ள இறுமாப்புக்குக் காரணம் என்னை, சொல்லுக என்று கேட்கின்றாய்; நான் சொல்வதைக் கேள்; திருமாலும் பிரமனும் தேவர்களும் முனிவர்களும் பிறரும் திருநீறு அணிந்த வடிவை உடையவராகிய எனது கணவரான சிவனுடைய ஞான சபையில் அதன்கண் அமைந்த அழகிய படியின் கீழ் நின்று போற்றும் நலத்தை நினைந்து இடியேறு போல இறுமாந்து இருக்கின்றார்கள்; அற்றாகப் பிறர் எல்லோரும் கண்டு அதிசயிக்குமாறு இங்கே சிவனது திருச்சபையினுடைய படி மேல் ஏறிச் சென்று தலைவராகிய அவருடைய திருவடியில் சுரக்கும் அருள் ஞான அமுதத்தைப் பருகுகின்றேன்; ஆதலால் ஞானச் செருக்காகிய இறுமாப்பினை நான் எய்துவதை நீ பெரிதாக எடுத்துரைப்பது என்னை காண். எ.று.
தலைவியாகிய நங்கையின் இடை உடுக்கை போல் சிறுத்திருப்பதை வியந்து, “துடியேறும் இடையை உடையவளே” என்று தோழி போற்றுகின்றாள். இறுமாப்பு - செருக்கு. திருமேனி முழுதும் வெண்ணீறு அணிந்து விளங்குவது பற்றிச் சிவனை, “பொடி யேறு வடிவுடையார்” என்று புகழ்கின்றாள். படியின் கீழ் நின்று போற்றும் தன்மை எய்துதற்கரிய பெருஞ் சிறப்பு என்ற எண்ணத்தால், திருமால் பிரமன் முதலாயினோர் செருக்கு மீதூர்ந்து இருக்கின்றார்கள் என்பாளாய், “சபையின் பொற் படிக் கீழ் நிற்பது பெற்று அப்பரிசே நினைந்து இடியேறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி” என்று தலைவி புகழ்கின்றாள். இடியேறு - வானத்தில் தோன்றி முழங்கும் இடி. நிற்கும் சிறப்பு ஒன்றைப் பெற்றே பெறலரும் பரிசு என்று கருதித் தேவர்கள் முதலாயினோர் பெரிய இறுமாப்பு எய்துவராயின், நான் படிமேல் ஏறி நில்லாமல் சிவனது திருவடியை அடைந்து அதன்கண் ஊறும் திருவடி ஞானமாகிய அமுதத்தை உண்டு ஞான இறுமாப்பு எய்துவது குற்றமாகாது காண் என்பது குறிப்பு. (53)
|