5767.

     ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
          என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
     காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
          கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம்
     தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
          தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
     மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
          வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.

உரை:

     தோழி! இதற்கு ஒரு முடிவு காணேன் என்று சொல்லி என்னை நோக்கி இங்கே நெடிது காலம் இருந்து கண்டு அதிசயமடைவது என்னையோ என்று கேட்கின்றாய்; நீ என்னைத் தனியே விட்டுப் போகும் போதெல்லாம் நான் காற்றால் அசையாத தீபம் போல இருக்கும்போது நான் கண்ட தன்மையை என்னவென்று சொல்வேன்; அண்ட பகரண்டங்களிலும் காணப்படாத பெரிய சோதி மலை ஒன்று பரநாத தலத்தே எனக்குத் தோன்றிற்று; அதன் நடுவே ஓர் ஒளி தோன்றிற்று; அது மாற்றுக் காணமுடியாத பொன் ஒளியோ? அவ்வொளிக்குள் ஆடலைப் புரியும் வள்ளலாகிய சிவனுடைய அருள் ஒளியோ? யாதோ? என்று அதிசயிக்கும் வகையில் விளங்கியது காண். எ.று.

     எக்காலத்தும் நெடிது காலம் இருந்திருந்து வியப்பு மேலிட்டு இருக்கின்றாய்; ஆதலால் இந்நிலைமைக்கு முடிவு காணாதவளாய் தோழி வருந்தி வினவினமை புலப்பட, “ஈற்றறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ” என்று தலைவி தோழி கூற்றைக் கொண்டெடுத்து மொழிகின்றாள். அசையாமல் நின்றாங்கு நிற்கும் தீப ஒளியை, “காற்றறியாத் தீபம்” என்று கூறுகின்றாள். காணப்படாத பரஞ்சோதி என்றற்கு, “தோற்றறியாப் பெருஞ்சோதி மலை” என்று குறிக்கின்றாள். பரநாத தலமாவது புருவநடுவாகிய இலாடத்தானத்துக்கு மேலே உள்ள பரநிலை; இதனை அக்ஞாஸ்தானம் என்றும் யோகநூலார் கூறுவர். அங்கே தோன்றும் சிவ ஒளியின் சிறப்பியல்பை, “பொன்னொளியோ அருளொளியோ” என்றும், இன்னதெனக் காணமாட்டாமை புலப்பட, “அதிசயிக்கும் வகையே” என்றும் அறிவிக்கின்றாள்.

     (54)