5768. நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழி.
உரை: தோழி! அம்பலத்தில் திருநடம் புரியும் சிவபெருமானுடைய திருமேனி நலத்தை நான் சென்று தெளிவாக அறிந்து வந்து உனக்குச் சொல்லுவேன் என்று மொழிகின்றாய்; நீ அவருடைய இடம் வலம் அறியமாட்டாய்; அங்ஙனமிருக்க நீயோ சென்று என்னுடைய கணவராகிய அவரது அழகும் நிறமும் இயல்பும் அறிந்து வந்து உரைக்க வல்லவளாவாயோ; பாடற்கமைந்த வேதங்களும் ஆகமங்களும் நாம் சென்று தெளிவாக அறிந்து வருவோம் என்று இரண்டும் தனித்தனியே முயன்று அவருடைய திருமேனியைக் கண்டு அந்த அளவே அடங்கிச் சிவசிவ என்று மொழிந்து கொண்டு அவ்விடத்தே குடங்களில் வைக்கப்படுகின்ற கள்ளை உண்டன போல மயங்கிச் செயலற்றொழிந்தமையை நீ காணாவிடினும் அறிந்தோர் சொல்லக் கேட்டதில்லையோ. எ.று.
நடம் புரிவார் - நடராசப் பெருமான். தெளியக் கண்டறிதலை நன்கறிதல் என்பர். நவிலுதல் - சொல்லுதல். அழகும் நிறமும் இயல்பும் முதலிய நலங்களெல்லாம் அடங்க, “எழில் வண்ணம்” என்று குறிக்கின்றாள். திடம்படல் - தெளிவு மிகல். கடம் பெறு கள் - குடத்தில் வைத்துப் புளிப்பேற்றிய கள். மறை வல்லவர்களும் சிவாகம ஞானிகளும் தனித்தனியே சென்று சிவத்தின் திருமேனியைக் கண்டு ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தார் போல நின்றொழிந்தமை விளக்க, “சிவசிவ என்று ஆங்கே மயங்குகின்றவாறு கண்டிலை நீ, ஆனாலும் கேட்டிலையோ” என்று இசைக்கின்றாள். (55)
|