5769.

     பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
          கொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
     மெய்பிடித்தாய் வாழியநீ சமரச சன்மார்க்கம்
          விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
     கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
          களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
     மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
          மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

உரை:

     தோழி! பொய் ஒழுக்கம் உடையவர்கள் எல்லாரும் வெளியிலே இருக்க நான் உள்ளே சென்று சிவனுடைய திருநடனத்தைக் கண்டு உள்ளம் மகிழும் போது என்னுடைய மணவாளராகிய அப்பெருமான் நீ மெய்ந்நெறியை மேற்கொண்டாயாதலால் நீ வாழ்வாயாக; சமரச சன்மார்க்க நெறி இனிது விளங்க நீ உலகத்தின்கண் விளக்கமுறுக என்று சொல்லி என்னுடைய கையைப் பிடித்தாராக, நான் அவருடைய திருவடியைப் பிடித்துக் கொண்டேன்; அவரும் நீ இப்பொழுது மகிழ்வாயாக; இனிமேல் நாமும் உம்மைக் கைவிடோம் என்று மொழிந்து மை தீட்டிய கண்களையுடைய உலக மகளிர் எல்லாரும் கண்டு வியக்கும்படியாக உனக்கு மாலை அணிந்தோம் என்று எனக்குச் சொல்லி மாலையும் அணிந்தருளினார். எ.று.

     பொய் ஒழுக்கம் உடையவர்களைப் “பொய் பிடித்தார்” என்று இகழ்கின்றாள். பொது நடம் - ஞான சபையில் நிகழ்த்துகின்ற ஞான நடனம். சமரச சன்மார்க்கம் இன்றி உலகில் விளக்கம் பெறலாகாமையின், “நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக” என்று இறைவன் உரைத்தருளினார் என்பது கருத்து. கட்டுரைத்தார் என்பதைக் கை பிடித்தார் என்று உரைக்கின்றாள். மை தீட்டிய கண்களையுடைய பெண்களை, “மை பிடித்த விழி உலகர்” என்று கூறுகின்றாள். மாலை யிட்டதை வாயாற் சொல்லிக் கையால் அணிந்தமை புலப்பட, “மாலையிட்டோம், என்று எனக்கு மாலை அணிந்தாரே” என உரைத்துத் தலைவி மகிழ்கின்றாள்.

     (56)