5770.

     பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
          பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
     திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும்
          தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
     வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
          வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
     கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
          கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.

உரை:

     தோழி! சிவயோகப் பொருத்தமில்லாத மற்றவர்கள் எல்லாரும் புறத்தே இருக்க நான் ஞான சபையின் அகத்தே சென்று சிவபெருமானுடைய ஞான நடனத்தைக் கண்டு மகிழ்ந்து அவர் எதிரே நிற்கும்போது ஒப்பற்ற தலைவராகிய அப்பெருமான் செம்மை அமைய என்னுடைய அருகே போந்து என் கையைப் படித்தாராக நானும் தெய்வத் தாமரை மலர் போன்ற அவருடைய திருவடியை விரைந்து பற்றிக் கொண்டேன்; அப்பொழுது அவர் பெண்ணே, நீ வருத்தம் எய்த வேண்டாம்; இனிச் சிறிதளவும் அறிவு மயங்குதலும் வேண்டா; உனக்குக் கெடாத வாழ்வு வந்து விட்டது; ஏழுலகத்தவரும் மதிக்கும் வகையில் மனம் மலர்ந்து வாழ்வாயாக என்று சொல்லி ஒரு மோதிரம் அளித்து என்னுடைய கையில் கங்கணம் ஒன்றையும் கட்டினார். எ.று.

     சிவயோகத்திற்குரிய ஞான இயல்பு இல்லாதவர்களை, “பொருத்தமிலார்” என்று புகல்கின்றாள். சிவநிலைக்குரிய செம்மை அமைய அருகணைந்த திறத்தை, “திருத்தமுற அருகணைந்து கை பிடித்தார்” என்றும், கையைத் தீண்டிய அளவிலே தான் அவர் திருவடியில் வீழ்ந்து விரைவாகப் பற்றிக் கொண்டமை புலப்பட, “நானும் தெய்வ மலரடி பிடித்துக் கொண்டேன் சிக்கெனவே” என்றும் தெரிவிக்கின்றாள். சிக்கென என்பது குறிப்பு மொழி; எளிதில் விகாதவாறு பற்றிக் கொண்டமை தோன்ற நின்றது. ஏழுலகும் என்பது ஆகுபெயராய் ஏழாகிய உலகத்தவரைக் குறித்து நின்றது உறவை வற்புறுத்தற்கு, “ஆழி அளித்து எனது கையில் பொற் கங்கணமும் கட்டினர் காண்” என்று தலைவி உரைக்கின்றாள்.

     (57)