5771.

     தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
          சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
     இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
          இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
     எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
          என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
     சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
          சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.

உரை:

     தோழி! ஆன்மாவாகிய தம்முடைய இயல்பை அறியாதவர் யாவரும் புறத்தே இருக்க நான் சபையின் அகத்தே சென்று அவரது ஞான நடனத்தைக் கண்டு உள்ளம் உவந்திருக்கும் சமயத்தில் தலைவராகிய அப்பெருமான் கண் இமைப்பதில்லாத தேவர்கள் எல்லாரும் கண்டு வியக்குமாறு தமது அழகிய முகத்தில் புன்னகை ஒளி விட்டுத் திகழ என்னை நோக்கி நீ எமது இயல்பை அறிந்து கொண்டாய் என்று சொல்லி என்னுடைய கையைப் பற்றினாராக. நானும் என்னை மறந்து அவருடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டேன்; அவர் மகிழ்ந்து பேரறிவே வடிவாய் அழியாச் சுகம் பெற்று நீடு வாழ்க என்று என்னை வாழ்த்தினர் காண். எ.று.

     தம்மை அறிந்தாலன்றித் தம்மை யுடைய தலைவரை உணர்தல் ஆன்மாக்களுக்கு இயலா தென்பது பற்றி, “தமை யறியார் எல்லாரும் புறத்திருக்க” என்று சாற்றுகின்றாள். “தம்மை யுணர்ந்து தமையுடைய தன் உணர்வார்” என்று மெய்கண்டாரும் கூறுவது காண்க. ஞான சபை நடனக் காட்சி காண்பார்க்கு வற்றாத பேரின்பம் தருவதொன்றாகலின், “சபை நடங் கண்டு உளம் களிக்கும் தருணத்தே” எனப் புகல்கின்றாள். தேவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்களை, “இமை அறியா விழி உடையார்” என்று இயம்புகின்றாள். இன்ப ஒளி திகழும் முகம் என்பது புலப்படச் சிவன் திருமுகத்தை, “மங்கள முகம்” என்றும், அதனிடத்தே விளங்கும் தெய்வ ஒளியை, “தளதள வென்று ஒளிர” என்றும் பாராட்டுகின்றாள். பதிப்பொருளாகிய சிவத்தின் இயல்பைத் தலைவி உணர்ந்து கொண்டமை புலப்பட, “இமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார்” என்றும், தான் அவருடைய திருவடியைப் பற்றிக் கொண்டமை விளங்க, “இறைவர் கால் பிடித்துக் கொண்டேன்” என்றும் கூறுகின்றாள். இதனால், திருவடி ஞானம் பெற்றமை தலைவி தெரிவித்தாளாம். சிற்றுணர்வும் சிறு தொழிலும் உடைய ஆன்மாவாகிய தான் சிவானந்த ஞானம் எய்தினமை தோன்ற, “சுமை அறியாப் பேரறிவே வடிவாகி” என்று சொல்லுகின்றாள். சுகம் - சிவானந்தம்.

     (58)