5772.

     ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
          அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
     மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
          மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
     மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருகின் றாய்நீ
          விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
     கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
          கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.

உரை:

     தோழி! சந்தேகமுற்று வருந்துகின்ற மக்கள் எல்லாரும் புறத்தே நிற்க நான் அம்பலத்திற்கு உள்ளே சென்று அவருடைய ஞான நடனத்தைக் கண்டு மகிழும்போது குற்றம் பொருந்திய மனத்தின் கண் பொருந்துவதில்லாத வள்ளலாகிய அப்பெருமான் என்னுடைய அருகே போந்து என்னைத் தழுவி என் மடியைப் பிடித்தாராக நானும் அவருடைய திருவடியைப் பிடித்துக் கொண்டேன்; அவரும் மனத்தின் கண் நம்மை வைத்துக்கொண்டு விழிப்போடு இருக்கின்றாயாதலால் நீ விளக்கமுறுக என்றும், சன்மார்க்க நெறியே உலகினர் விளங்கிக் கொள்ள விளம்புவாயாக என்றும் சொல்லி என் கையில் பசுமையான பொன்னாலாகிய கங்கணத்தையும் அணிந்தார்; அவர் கருணை மிகுதியால் எனக்குத் தாய் ஒப்பவர் என அறிக என்று தலைவி உரைக்கின்றாள். எ.று.

           சிவபரம்பொருளின் உண்மைத் தன்மையை அறியாமல் சந்தேகப் படுபவர்களை, “ஐயமுற்றார்” என்று அறிவிக்கின்றாள். தூய்மைஇல்லாத உள்ளத்தில் சிவபெருமான் தங்குவது இல்லை என்பது பற்றி, “மையகத்தே பொருந்தாத வள்ளல்” என்று போற்றுகின்றாள். மெய்யகம் - உடம்பின் உள்ளே உள்ள மனமாகிய கரணம். சன்மார்க்க ஞானத்தை உலகினர்க்கு உரைக்க வேண்டுமென வற்புறுத்தினமை புலப்பட, “சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது கையகத்தே ஒரு பசும்பொன் கங்கணம் புனைந்தார்” என்று தலைவி மகிழ்ந்து உரைக்கின்றாள்.

     (59)