5773. காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டறியே.
உரை: தோழி! காமாலை என்ற நோய் பற்றிய கண்களையுடைய பலர் அவருடைய பூமாலையை விரும்பினர்; இரண்டிற்கு மேற்பட்ட கண்களையுடைய பல தேவர்கள் அவரை மணந்து கொள்ள விரும்பி நாற்றிசையும் திரிந்தார்கள்; பெரிய மயக்கமாகிய மனச் செருக்கால் அறிவு மயங்கி உடம்பெல்லாம் பெண் குறி கொண்ட கண்களையுடைய இந்திரர்கள் பலர் அவரை அடையும் வெறி கொண்டு அலைந்தனர்; அவ்வாறு மயக்கமுற்ற அவர்களெல்லாம் கண்டு மனம் வெட்குமாறு அரும் பெருஞ் சோதி உருவினராகிய அப்பெருமான் என்னை விரும்பி மணந்து கொண்டார்; தேன் பொருந்திய பூமாலை அணிந்த கூந்தலையுடைய தோழி, நான் செய்த தவத்துக்கு ஒப்பாக தேவர்களோ திருமால் முதலிய முனிவர்களோ செய்ததில்லை என்பதை நீயே அறிந்து கொள்வாயாக. எ.று.
காமாலை - ஒரு வகை நோய். இந் நோய் கண்ணில் பரந்து காணப்படும் பொருள் எல்லாம் மஞ்சள் நிறமாகத் தோற்றுவிக்கும். இது முற்றிய வழி கண் பார்வையைக் கெடுக்கும் என்று கூறுவர். இரண்டு கண்களுக்கு மேற்கொண்ட தேவர்களை, “கணம் கொண்ட கண்ணர்” என்று கூறுகின்றாள். கோமாலை - பெரிய மயக்கம்; காம மயக்கமுமாம். உடம்பெல்லாம் குறி கொண்ட கண்ணர் - அகலிகைபாற் கொண்ட காம மயக்கத்தாற் கவுதமரால் உடம்பெல்லாம் பெண்குறி வடிவமுற்றுப் பின்னர்க் கண்களாக மாறப் பெற்ற வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. அம்மாலை என்பது செய்யுளாகலின் சுட்டு நீண்டு ஆமாலை என வந்தது. ஆமாலை அவர் - அத்தகைய மயக்கமுற்றவர்கள். தேமாலை - தேன் பொருந்திய அழகிய பூமாலை; இது தலைவி தோழியைச் சிறப்பித்துக் கூறுவதாம். (60)
|