5774. காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
கருதுபல குறிக்கொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
தாமாலைச் சிறுமாயா சக்திகளாம் இவர்கள்
தாமோமா மாயைவரு சக்திகள்ஓங் காரத்
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
உரை: தோழி! காமாலைக் கண்ணர் என்றும் கணக்கண்ணர் என்றும் பல குறி கொண்ட கண்ணர் என்றும் நான் முன்னே சொன்னேன்; அந்தத் திருமாலும் அந்த அயனும் இந்திரனும் ஆகிய இவர்களே யன்றி மற்றைத் தேவர்களும், காற்றில் அசைகின்ற அணுக்களாகிய ஒழுங்கு பொருந்திய சிறுசிறு சத்திகளாகிய இவர்களும், மாமாயையில் இயங்கும் சத்திகளும், ஓங்காரத்தில் இயங்குகின்ற இனிய வரிசை பொருந்திய சத்திகளும் பார்த்துக்கொண்டிருக்க எனக்கு ஞான சபையை உடையவராகிய சிவபெருமான் அழகிய தமது மணமாலையை அணிந்தருளினார். எ.று.
நிற வேறுபாடு பற்றிச் செங்கண் மாலை “காமாலைக் கண்ணீர்” என வழங்குவது பற்றியும், எட்டு கண்களை உடைமை பற்றிப் பிரமனை, “கணக்கண்ணர்” என்றும், ஆயிரம் கண்ணோன் என்று பெயர் கூறப்படுவது பற்றி இந்திரனை, “பல குறி கொண்ட கண்ணர்” என்றும் கூறினேன் என்பாளாய், “ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்” என்று தலைவி கூறுகின்றாள். அம்மால் என்பது செய்யுளாதலின் சுட்டு நீண்டு ஆமால் என வந்தது. அணு வடிவினர் என்பதைப் பற்றி மாயையில் ஒடுங்கி யுள்ள சத்திகளை, “சிறு மாயா சத்திகள்” என மொழிகின்றாள். சுத்த மாயையை மாமாயை என்பதால் அதன்கண் ஒடுங்கிய சத்திகளை, “மாமாயை வருசத்திகள்” என வழங்குகின்றாள். பிரணவத்தில் ஒடுங்கி யிருக்கும் சிவசத்திகளை, “ஓங்காரத் தேமாலைச் சத்திகள்” என்று தெரிவிக்கின்றாள். இச்சத்திகள் ஆன்மாக்களில் தோய்ந்து மயக்குவதில்லையாதலால் அவற்றை, “தேமாலைச் சத்திகள்” என்று இயம்புகின்றாள். தேமாலைச் சத்திகள் - இன்பம் செய்யும் இயல்புடைய சத்திகள். மாயா சத்திகளின் இயல்பு பௌட்கரம் முதலிய சிவாகமங்களில் அத்துவப் பிரகரணப் பகுதியில் உரைக்கப்படுகின்றன. (61)
|