5775. மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
உரை: அன்புடைய தோழியே! நான் சொல்வதைக் கேட்பாயாக; அம்பலத்தில் திருநடனம் புரிகின்ற சிவனுடைய திருவடிகளாகிய மலர் போன்ற பாதத்தில் பொருந்தியுள்ள பாதுகையின் மேலே எழுகின்ற அணுக்களை மாதேவர்களும் உருத்திரர்களும் சங்கேந்துகின்ற நாரணர்களும், தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பிரமர்களும், தேவலோகத்து இந்திரர்களும் பல கோடிக் கணக்கினராய்த் தத்தமக்குரிய உருப்பெற்று ஆதாரமாகக் கொண்டு ஏற்புடைய தொழில் புரிகின்றார்கள் என்றால் தலைவராகிய சிவனுடைய திருவடியின் பெருமையை யார் உரைக்க வல்லார். எ.று.
“நெருங்கிய அன்புடையவளாதல் தோன்றத் தோழியை, “மாதே” என்று அழைக்கின்றாள். திருவடியில் அணிகின்ற பாதரட்சையைப் “பாதுகை” என்று குறிக்கின்றாள். தூய்மையே வடிவமாதலின் திருவடிகளில் அணுக்கள் பொருந்தி இருப்பதற்கு இடமில்லாமை விளங்க, “பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்” என்று பகர்கின்றாள். கையில் சங்கேந்தி இருத்தலால் நாராயணர்களை, “வளை பிடித்த நாரணர்கள்” என்றும், நான்முகர்கள் தாமரைப் பூவில் இருப்பது பற்றி, “போதேயும் நான்முகர்கள்” என்றும் புகல்கின்றாள். அணுக்களையே ஆதாரமாகக் கொண்டு இவர்கள் பலரும் தொழில் புரிவது பற்றி, “ஆதேயராகி இங்கே தொழில் புரிவார்” என்று சொல்லுகின்றாள். ஆதேயர் - ஆதாரத்தில் இருப்பவர். (62)
|