5776. உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர் பல்கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தம்உறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தம்ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி
மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
உரை: தோழி! கோடிக் கணக்கினரான உருத்திரர்களும் நாரணர்களும் பெரிய பிரமர்களும் இந்திரர்களும் பெருகியுள்ள மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் சொல்லுமிடத்து அளவில்லாத கோடிக் கணக்கினராய் ஆங்காங்கே தம்மிற் கூடிக்கொண்டு திருந்திய ஞான சபையில் நிகழும் ஞான நடனத்தைக் காணும் எண்ணமுடையவராய் அச்சபையின் படிகளில் நின்று கொண்டு மயங்குகின்றார்கள்; நான் ஒருத்தி மட்டும் ஒரு சிறு வருத்தமுமின்றிப் படிகளின் மேலேறி அந்த ஞான நடனத்தைக் காண்கின்றேன்; என்னுடைய பெரிய தவத்தின் பயனை என்னென்பது. எ.று.
அண்டங்களைப் படைப்பவராதலின் பிரமர்களை “உறுபிரமர்” என உரைக்கின்றாள். உருத்திரர் முதலிய எல்லாரினும் தொகையால் மிகுந்தவர் என்பது பற்றித் தேவர்களை, “பெருத்த மற்றைத் தேவர்கள்” என்று பேசுகின்றாள். அனந்தம் கோடி - அளவில்லாத கோடி. ஞான சபையின் படிகளின் மேல் ஏறிச் சபையை அடைதல் முடியாதாகையால், “படிப் புறத்தே நின்று தியங்குகின்றார்” என்று கூறுகின்றாள். தேவர் முதலிய பலராலும் படியேறிக் காண்டற்கரிய ஞான நடனத்தை நான் ஏறிச் சென்று கண்டு மகிழ்தற்கு என்னுடைய பெரிய தவந்தான் காரணம் என்பாளாய், “என் மாதவந்தான் பெரிதே” என்று வியந்து உரைக்கின்றாள். (63)
|