5777. பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
பகிர்அண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுத உணவும்
பெற்றேன்நான் செய்ததவம் பேர்உலகில் பெரிதே.
உரை: தோழி! நிலவுலகத்திலுள்ள அதிபர்களும், பலவாகிய புவனங்களில் உள்ள அதிபர்களும், அண்ட பகிரண்டங்களில் உள்ள அதிபர்களும், பராகாசமாகிய வியோமத்தில் வாழும் அதிபர்களும் அழகு குன்றாத ஞான சபையில் உள்ள படிகளின் கீழே நின்று விழித்திருக்க என்னை மட்டில் அப்பரமன் மேலேற்றினாராக நானும் மேலே சென்று சபையில் நின்று சீர் குறையாத சிவனுடைய யோகாந்த நடனத்தையும் அழகிய கலாந்த நடனத்தையும் நாதாந்த நடனத்தையும் போதாந்தம் என்ற பெயர் நிலவுகின்ற நடனத்தையும் கண்டு மகிழ்ந்து அவரது ஞானாமுதாகிய அமுதத்தையும் உண்டு மகிழ்ந்தேன்; நான் இந்தப் பெரிய உலகத்தில் செய்த தவம் பெரிதாகும். எ.று.
பார் - உலகு; நிலவுலகம். உலகங்களைப் புவனம் என்னும் வழக்குப் பற்றி அப்புவன பதிகளை, “புவனாதிபர்” என்று புகல்கின்றாள். புவனங்கள் கலாக்கினி ருத்திர புவனம் முதல் அனாசிருதை ஈறாக இருநூற்றி இருபத்து நான்கு என்பர். வேறு சில ஆகமிகள் மேலும் எண்ணிறந்தன என்றுரைப்பர். அண்ட பகிரண்டங்கள் அத்தனையும் தன்னுள் அடக்கி யிருப்பது “சிற்பர வியோமம்” எனப்படும். வியோமம் - ஆகாசம். யோகாந்தம் முதல் நான்கு நடனங்களையும் தரிசித்து ஞான போனகம் உண்டமை புலப்படுக்கின்றாளாதலால், “திருவமுத உணவும் பெற்றேன்” என்று உரைக்கின்றாள். (64)
|