5778. என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத்
தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
உரை: தோழி! நான் ஞான சபையின் பின்பு கண்ட ஞான நடனக் காட்சியை என்னென்று சொல்லுவேன்; அது நினைவெல்லையையும் வாக்கெல்லையையும் கடந்து இரண்டிற்கும் எட்டாத நிலையில் உள்ளது; அவ்விடத்தே அன்பு நெறியை வற்புறுத்துகின்ற சித்தாந்த நடனத்தையும் ஞானத்தை வற்புறுத்துகின்ற வேதாந்த நடனத்தையும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத ஒளி விளங்குகின்ற சபையின்கண் கண்டு மகிழ்ந்தேன்; இன்ப மயமாய் ஒன்றாயும் இரண்டாயும் ஒன்றும் இரண்டும் இல்லதுமாகியும் எல்லாம் செயல் வல்ல பரம்பொருளாய் விளக்கமுற்றுத் தனக்குப் பரமும் பரம்பரமும் கடந்த சமரசம் என்ற பெயர் கொண்ட அந்த ஒப்பற்ற நடனத்தையும் கண்ணாரக் கண்டு தனித்த சிவானந்தமாகிய அம்பலத்தின்கண் இன்புற்றேன். எ.று.
வாக்கு மனங்களுக்கு எட்டாத காட்சி அந்தச் சிவானந்த ஞானக் காட்சி என்பாளாய், “நான் பின்னர்க் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்” என்று இயம்புகின்றாள். அன்பு நெறியை வற்புறுத்துவது ஆகம சித்தாந்தமாதலின், “அன்புறு சித்தாந்த நடம்” என்று அறிவிக்கின்றாள். ஞான நெறியாதலின் வேதாந்தத்தை வெறிதே, “வேதாந்த நடம்” என்று விளம்புகின்றாள். சமரச ஞான நடம் இன்ப மயமாய்ச் சிவமாய் விளங்குதலால், “இன்ப மயமாய் ஒன்றாய்” என்றும், சிவமும் சத்தியுமாய் விளங்குதல் தோன்ற, “இரண்டாய்” என்றும், பரசிவமாய் பரபோகம் விளைவிப்பது பற்றி, “ஒன்றிரண்டும் இல்லதுவாய்” என்றும் இசைக்கின்றாள். தனக்கு மிக்கது ஒன்றும் இல்லாமை பற்றிச் சமரச ஞானானந்த நடனத்தை, “தன்பரமாம் பரம் கடந்த சமரசப் பேரந்தத் தனிநடம்” என்று சிறப்பிக்கின்றாள். தனித்த சுகப் பொது - ஒப்பற்ற சமரச ஞானானந்த சபை. இதனை வேறு சொற்களால் விளக்கலாகாமை பற்றி, “தனித்த சுகப் பொது” எனத் தலைவி குறிக்கின்றாள். (65)
|