5779.

     தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
          துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
     ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
          என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
     ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
          என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
     ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
          ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.

உரை:

     தோழி! நீ என்னை நோக்கி உறங்குக என்று சொல்லுகின்றாய்; யான் உறங்க முடியுமோ? எனது தலைவராகிய சிவபெருமான் என்பால் வரும் சமயம் இதுவாதலால் இச்சமயத்தில் எனக்கு உறக்கந்தான் வருமோ; வாராது காண்; இங்கே நான் தனித்திருக்க வேண்டுமாதலால் என்னுடைய தூக்கம் அனைத்தையும் உனக்குரிய தாக்கி ஏக்கம் சிறிதுமின்றி வெளியே போய் உறங்குவாயாக; என்னுடைய இரண்டு கண்களில் உள்ள மணி போல்பவராகிய அப்பெருமான் என்னை வந்து கலந்தவுடன் என் உள்ளம் உயர்ந்தோங்க நான் அவரைக் கூடி அவரும் நானும் ஒன்றான பின்பு நான் உளம் உவந்து உன்னை எழுப்புவேன். எ.று.

     தூங்குவனோ என்பதில் உள்ள ஓகாரம் எதிர்மறை. துரை - தலைவர் என்னும் பொருளில் வருவது. தலைவனும் தானும் கூடுகின்ற கூட்டம் தனித்து நிகழ்வதாதலால், “இங்கினி நான் தனித்திருக்க வேண்டுவது” என்று மொழிகின்றாள். ஏங்கல் - ஏக்கம். ஏக்கம் உளதாகிய வழி உறக்கம் வாராதாதலால், “ஏங்கலறப் புறத்தே போய் தூங்குக” என்று தலைவி சொல்லுகின்றாள். சிவமும் தானும் ஒன்றாய்க் கலந்த வழி ஆன்ம சிற்சத்தி சிவமாந் தன்மை எய்துதலால், “பின்னர் உனை உவந்து எழுப்புகின்றேன்” என்று தலைவி உரைக்கின்றாள்.

     (66)