5780. ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
உய்ய இங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
உரை: தோழி! ஐயப்பட வேண்டா. யாம் காலைப் பொழுதில் வந்தடைவோம். யாம் சொல்லும் இது ஆணை மொழியாகும் என்று தலைவர் எனக்கு உரைத்துள்ளார். ஆதலால் அவரது ஆணை திருவருள் ஆணையாகும்; அது ஒருகாலும் நம்மால் புறக்கணிக்கப்படலாகாது. இரவிருளும் கொடியோருடைய உள்ளத்தில் புகுந்து ஒடுங்கப் போய்விட்டதால் எனக்கு இரவு இப்போது விடிந்து விட்டதாம். ஞானச் சுடராகிய சூரிய உதயம் வருகின்ற சமயமாதலால் தையலாகிய தோழியே, நான் இனித் தனித்திருக்க வேண்டும். ஆதலால் நீ புறத்தே அகன்று சிறிது ஒதுங்கி யிருத்தல் வேண்டும். தலைவராகிய சிவபெருமான் வந்தவுடனே நான் உய்யும் பொருட்டு அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்றான பின்பு உன்னை மனமகிழ்ச்சியோடு அழைக்கின்றேன். வருக. எ.று.
தலைவர் உரைத்தருளிய மொழியின் உண்மை நிலையை விளக்குதற்கு, “ஐயமுறேல்” என்றும், அவர் வந்து கூடும் காலம் இது என்றற்கு, “காலையில் யாம் வருகின்றோம்” என்றும் தலைவர் கூற்றைக் கொண்டெடுத்து மொழிகின்றாள். வருகின்றோம் என்றாராயினும் அது அவருடைய அருளுரை என வற்புறுத்தற்கு, “இது நம் ஆணை என்றார்” என்று கூறுகின்றாள். புறக்கணிக்கக் கூடாது எனத் தெளிவுறுத்தற்கு, “அவர் ஆணை அருளாணை கண்டாய்” எனத் தலைவி உரைக்கின்றாள். குளிர்ந்த அன்பில்லாத தீயவர் மனத்தை, “வெய்யர் உளம்” என்று விளம்புகின்றாள். அவர் மனத்தில் அஞ்ஞானம் நிறைந்திருப்பது பற்றி, “வெய்யர் உளத்தே புகுதப் போனது இருள்” என இயம்புகின்றாள். சிவஞானப் பேரொளி தோன்றினமை புலப்பட, “இரவு விடிந்தது நல்சுடர் உதயம் மேவுகின்ற தருணம்” என்று உரைக்கின்றாள். சிவயோக போகம் தனித்து நுகரப்படுவது என்பதற்கு, “இனி நான் தணிக்க வேண்டுவதாதலினால் சற்றே அப்புறத்து இரு நீ” என்று சாற்றுகின்றாள். சிவயோகத்தைச் சிவக் கலப்பு என்று செப்புகின்றாளாதலால், அதனால் விளையும் சிவபோகப் பயனை, “உய்ய இங்கே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்றான பின்னர்” என விளம்புகின்றாள். சிவபோகம் எய்திய ஆன்மா பின்னர்ப் பிற ஆன்மாக்களுக்குத் தான் நுகர்ந்த சிவானந்தத்தை உரைத்ததில்லையாயினும் வடலூர் வள்ளற் பெருமான் தாம் பெற்ற அவ்வனுபவத்தை உணர்ந்து பாடுகின்றாராதலால், “அவரும் நானும் ஒன்றான பின்னர்” என உவந்து அழைக்கின்றார். இது வடலூர் வள்ளற் பெருமான் தான் கண்ட சிவானுபவத்தை உரைத்தருளும் புதுமையாகும்.. (67)
|