5781. மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
துகள்ஒளிமா மாயைமதி ஒளியோடுபோ யினவால்
இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
உரை: தோழி! அம்பலத்தைத் தனக்கு இடமாக உடையவரும், எனக்குக் கணவரும், என்னுடைய உயிர்த் தலைவரும் ஆகிய சிவபரம் பொருள் உரைத்தருளிய மணிமொழியை வெள்ளிடைமலை எனக் கொள்ளல் வேண்டும்; இப்போது நிறைந்த அஞ்ஞான இருள் முற்றவும் ஒழிந்து விட்டது; பலவாகிய மாயையின் ஒடுங்கிய இருளொளியும் மாமாயையாகிய இருள் கலந்த நிலவொளியும் அகன்றொழிந்தன; இப்பொழுது திருவருள் ஞானமாகிய பெரிய ஒளி தோன்றி விட்டபடியால் இனிமேல் நீ சிறிது வெளியே இருப்பாயாக; இறைவனாகிய சிவபெருமான் என்பால் வந்தவுடனே அவரோடு கலத்தல் உடையேன்; நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்றான பின்பு மகிழ்ச்சியுடன் உன்னை அழைக்கின்றேன், எ.று.
மன்று - இங்கே ஞான சபையைக் குறிக்கின்றது. ஏனைய சிற்சபை பொற்சபைகளிலும் ஞான சபை அவருக்குச் சிறப்பாக உரியதாதலால் அது விளங்க, “மன்றுடையார்” எனத் தலைவி புகல்கின்றாள். வந்தணைவோம் என்ற அன்பு மொழியை, “மணிவார்த்தை” என்று உரைக்கின்றாள். மலை யிலக்கு என்பது வெள்ளிடை மலை எனவும் வழங்கும். வெட்ட வெளியில் நிற்கும் தனிமலை போல் விளக்கமுறத் தோன்றுவதொன்றை மலை இலக்கு என்பது மரபு. துன்றுதல் - நிறைதல். உலகியல் மாயையாகிய பேரிருளை, “துன்றிய பேரிருள்” என்று தலைவி சொல்லுகின்றாள். மாயை, மாமாயை என வரும் மாயை வகையைத்தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி பற்றி, “பன்மாயைத் துகள்” என்றும், “மாமாயை மதி” என்றும் மொழிகின்றாள். மாயையிடத்தே மயக்கும் இருட்டன்மையும் உலகியல் ஒளிப் பண்பும் இருப்பது பற்றி, “பன்மாயைத் துகள் ஒளி” என்றும், “மாமாயை மதி ஒளி” என்றும் பிரித்துரைக்கின்றாள். துகளிடத்தும் மதி நிலவின் கண்ணும் இருள் தோய்ந்திருப்பது விளங்க இவ்வாறு உரைக்கின்றாள். இருள் கலவாத தூய ஒளி என்பாளாய்த் திருவருள் ஞான ஒளியை, “அருளாம் பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றாள். அருள் ஞான ஒளி பெற்ற ஆன்மா தனது போக நுகர்ச்சிக்குரிய சிற்சத்தி தன் தன்மை இழவாது என்பது புலப்பட, “அவரும் நானும் ஒன்றான பின்பு உடனே உவந்து உனை அழைக்கின்றேன்” என்று தலைவி தோழிக்கு உரைக்குமாற்றால் புலப்படுகின்றது. (68)
|