5782. வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
உரை: தோழி! இது விடியற் காலமாதலால் சிவபரம்பொருளின் அருளொளி எழுந்து தோன்றுகின்றது; இது என்னுடைய வள்ளலாகிய சிவ பரம்பொருள் வந்தருளுகின்ற காலமாகும் : ஒரு சொல்லாகக் கூறுகின்றேனாதலால் அதனை அசட்டை செய்யாதே; அவர் வரும் போது இங்கே நான் தனித்திருக்க வேண்டும்; ஆகையால் தாழ்ந்த கூந்தலுடைய தோழியாகிய நீ இவ்விடத்தினின்றும் புறத்தே சென்று தத்துவங்களாகிய பெண்களோடு கூடி அவர் கூட்டத்தில் இருந்து பொய்ம்மொழிகளைப் பேசிக் கொண்டிராமல் பெருமானுடைய உண்மைப் புகழை உரைத்துக் கொண்டிருப்பாயாக; புதுவதாகிய திருவருள் ஞான அமுதத்தை அளித்தருளும் அருட் சித்தராகிய அவர் என்பால் வந்தவுடனே உய்தி பெறும் நிலையில் நான் அவரைக் கூடி அவரும் நானும் ஒன்றான பின்பு உன்னை மகிழ்வுடன் அழைக்கின்றேன்; அப்பொழுது நீ வருவாயாக. எ.று.
வைகறை - விடியற் காலம். திருவருள் ஞானமாகிய ஒளி தோன்றும் நிலையை, “அருள் உதயம் தோன்றுகின்றது” என்று உரைக்கின்றாள். அதனுடைய உண்மைத் தன்மை வெளிப்படுத்தற்கு, “வார்த்தை ஒன்றானாலும்” என வழங்குகிறாள். சைகரைதல் - அலட்சியப் படுத்திப் பேசுதல். சிவயோக போக நிலையில் தத்துவங்கள் முப்பத்தாறும் ஒடுங்கி விடுவது பற்றி, “தத்துவப் பெண் குழுவில் பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ” என்று புகல்கின்றாள். தத்துவங்கள் முப்பத்தாறும் தாத்துவிகங்கள் அறுபதும் சேரத் தத்துவம் தொண்ணூற்றாறு ஆதலின் அவற்றை, “தத்துவப் பெண் குழு” என்று தொகுத்துக் கூறுகின்றாள். தத்துவக் குழுவில் சேர்ந்த ஆன்மாபொய்யும் மெய்யும் கலந்துரைக்கும் வாய்ப்பு இருத்தலால், “பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ” என்று புகன்றுரைக்கின்றாள். பொய் கரைதல் - பொய் பேசுதல். உள்ளபடி புகழ் பேசி இரு நீ என்றது இறைவனுடைய பொருள் சேர் புகழே ஓதிக் கொண்டிருப்பாயாக என்பது விளங்க நிற்கிறது. அருள் சித்தர் - திருவருள் ஞானத்தை வழங்கும் சிவஞான மூர்த்தி. உய்கரை - உய்தி பெறும் நிலை. (69)
|