5783. காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
உரை: தோழி! விடியற் காலையில் என் கணவராகிய சிவபெருமான் என்பால் வந்தருளுவார் என்று உனக்கு உரைத்துள்ளேன்; நான் சொன்னது உன் காதில் விழவில்லை போலும்; செய்தற்குரிய வேலை ஒன்றும் இல்லாதவள் போல என்னோடு வம்புரைகளைப் பேசிக் காலம் போக்குகின்றாய்; பொழுது விடிந்தமையின் நான் தனித்திருக்க வேண்டுமாதலால் நீ சோலைக்குச் சென்று புதிய பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்துக் கொண்டு வந்து மனையின் புறத்தே தங்கியிருப்பாயாக; என்னுடைய துணைவர் வந்தவுடன் ஓசை செய்யாது நான் அவரோடு கலந்து அவரும் நானும் ஒன்றான பின்பு உன்னை மகிழ்வுடன் அழைத்துக் கொள்கின்றேன்; நீ செல்வாயாக. எ.று.
என்னல் - வாயாற் சொல்லுதல். வேலை யிலாதவள் - செய்தற்குரிய வேலை இல்லாதவள்; வெறிதே இருப்பவள் என்றுமாம். வம்பளத்தல் - பூசல் செய்தற்குரிய பேச்சுக்களைப் பேசுதல். பூசல் - சிறு சண்டை. வீணே வம்புகளைப் பேசிப் பொழுது போக்குவதை விடுத்துப் புதிய புதிய மலர்களைக் கொய்து மாலை தொடுத்து வருவது இனிய பொழுது போக்காதலால் அதனைச் செய்க என்பாளாய், “சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்து புறத்தில் சூழ்ந்திருப்பாய்” என்று தலைவி தோழிக்கு உரைக்கின்றாள். ஓலுறுதல் - ஓசை செய்தல். ஓல் என்பது இங்கு ஓலையென வந்தது. அழைக்கின்றேன் என்பதை அழைத்துக் கொள்வேன் என்னும் பொருட்டு. (70)
|