5784.

     விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
          வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
     ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர்
          ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
     திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
          தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
     உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
          ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

உரை:

     தோழி! பொழுது விடிந்து விட்டது; ஆணவமாகிய மிக்க பேரிருள் நீங்கி ஒழிந்தது. கொடிய வினைகளின் கூட்டம் யாவும் வெந்தொழிந்தது; மாயையும் இடை முறிந்து கெட்டது; மாமாயையும் நீங்கி விட்டது; அறிவை மறைத்துக் கொண்டிருந்த திரையும் போய்விட்டது; பெரிய ஒளியாகிய திருவருள் ஞானமாகிய சூரியன் உதயமாகிவிட்டது; இப்பொழுது இது தலைவராகிய சிவபெருமான் வருகின்ற தருணமாகும்; நான் திடமாகத் தனித்திருக்க வேண்டுமாதலால் இனிய மொழிகளைப் பேசும் தோழியாகிய நீ புறத்தே சிறிது இருப்பாயாக; தேவராகிய அப்பெருமான் வந்தவுடனே நான் பொன் உடம்புடன் அவரைக் கூடி அவரும் நானும் ஒன்றான பின்பு உன்னை மகிழ்ந்து அழைக்கின்றேன்; அப்பொழுது வருக. எ.று.

     உயிரறிவை மறைத்து ஒழுகுவது பற்றி, “ஆணவமாம் காரிருள்” என்று அதனை மொழிகின்றாள். பிறப்பு மாறினும் விடாது பற்றி வருத்தும் கொடுமை உடையதாதலால் கன்ம மலத்தை, “வெய்ய வினைத் திரள்” என்றும், அதன் தொடர்பு நீங்கினமை விளங்க, “வெந்தது காண்” என்றும் உரைக்கின்றாள். மாயா மலம் நீங்கினமை விளங்க, “மாயை ஒழிந்தது” என்றும், மாமாயை என்னும் சுத்த மாயையின் நீக்கத்தை, “மாமாயை ஒழிந்தது” என்றும் விளம்புகின்றாள். மாயா சத்திகளாகிய உயிரறிவை மறைக்கும் திரைகள் ஏழும் நீங்கின; திருவருள் ஞானமென்னும் சூரியன் எழுந்து விட்டது என்பாளாய், “திரை தீர்ந்தது; பேரொளி உதயம் செய்தது” எனத் தலைவி பேசுகின்றாள். தலைவராகிய சிவபெருமான் வந்தருளும் காலத்தில் மனக் கலக்கமின்றி அசைவற்று இருக்க வேண்டும் என்பது பற்றி, “திடம் பெற நான் தனித்திருக்க வேண்டுவது” என்று செப்புகின்றாள். சிவதரிசனம் பெறும் ஆன்மா சிவத்தினது பொன்னிற உடம்பைப் பெறுகிறபடியால் அவ்வுடம்புடன் சிவத்தைக் கூடும் தனது நிலையை, “உடம்புறவே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்றான பின்னர்” என்று உரைக்கின்றாள். இதனால், சிவமாம் தன்மை எய்திய உயிர் அத்தன்மை பெறுதற்குச் சமைந்த ஏனைய உயிர்களைத் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருத்தால் அழைக்கும் திறம் கூறப்படுகிறது.

     (71)