5785. மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
வழக்கம்அது கண்டனம்நீ மணவாளர் உடனே
காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
ஓலையிறே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
உரை: தோழி! மாலைப் பொழுதில் உலகியல் மகளிர் தம் கணவரோடு கூடி மகிழ்தல் இயல்பு; அதனைப் பலகாலும் கண்டுள்ளோம்; நீ மணவாளராகிய அப்பெருமானோடு காலையில் கலந்து மகிழ்தல் வேண்டி என்னைப் புறத்தே செல்க என்று சொல்லுகின்றாய்; இஃது எனக்கு அதிசயமாய் இருக்கிறது; நானும் இத்தகைய நிகழ்ச்சியைக் கண்டதில்லை என்று சொல்லக் கருதுகின்றாய்; அவ்வாறு கருதுதல் வேண்டா. தோழி! நீ நூல்களில் எழுதி இருப்பதை மனத்தில் நினைத்து வருந்துகின்றாய்; ஆதலால் நீ காலையில் கூடி மகிழும் இரகசியத்தை அறிந்திலை; தருமச் சாலையில் சமரச சங்கத்தில் சிறிது இருப்பாயாயின் இந்த இரகசியத்தின் இயல்பை அறிந்துகொள்வாய் எ.று.
மாலைக் காலமாகிய இரவுப் போதில் மகளிர் தம்முடைய கணவரோடு மகிழுதல் உலகியல் மரபாதலால் தோழி, “மாலையில் உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம்” என்று தலைவிக்குக் கூறினாளாக, அதனை அவள் கொண்டெடுத்து மொழிகின்றாளாதலின், “வழக்கம் அது கண்டனம்” என்று மொழிகின்றாள். உலகியல் மரபை வற்புறுத்தும் நூல் வழக்கு என்று தலைவி எடுத்துரைக்கின்றாளாதலால், “ஓலையிலே பொறித்ததை நீ உன் உள்ளத்தே கருதி உழல்கின்றாய்” என்றும், நூல் வழக்கினும் ஞான வழக்கம் வேறு என்பாளாய், “இவ்வளவு அறியாய்” என்றும் உரைக்கின்றாள். தருமச் சாலை அனுபவமும் சமரச சன்மார்க்க சங்க அனுபவமும் இல்லாமையால் இங்கே எடுத்து விளக்க முடியவில்லை. (72)
|