5786. இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
உரை: தோழி, இரவுக் காலத்தில் இந்த உலக மகளிர் தத்தம் கணவரோடு கூடி மகிழ்கின்றார்கள்; ஆனால் அவர்கள் அக்கூட்டத்தின் இயல்பையும் அதனிடத்திலிருந்து விலகும் இயல்பையும் அறியாமல் காம மயக்கம் ஒன்றையே அறிந்தொழிகின்றார்கள்; மறைவாகக் கள்ளுண்டு அறிவு மயங்கியிருக்கும் போது ஒருவர்க்கு இனிய பழத்தைக் கொடுத்தால் அவர் அதனை யுண்டுச் சுவைத்து மகிழ்ச்சி அடைவாரோ, அடைய மாட்டார்; அது போல வற்றாத நீர் பொருந்திய கிணற்றிலே விழுந்தவர் போல இவ்வுலகவர் கூடும் கூட்டத்தில் சுகம் ஒன்றுமில்லையாம்; அவர்கள் அதனால் துன்பமே காண்கின்றாகள்; திண்ணிய மனத்துடன் என் கணவராகிய பெருமானோடு காலைப் பொழுதில் கலந்து ஒன்றாவதால் உளதாகும் பேரின்பம் சொல்லுதற் கரிதாம். எ.று.
உலகவர் இரவில் கணவரோடு கூடிப் பெறும் இன்பம் இன்பமாய்த் தோன்றினும் துன்ப விளைவாய் உலகியல் மயக்கத்தில் ஆழ்த்துதலின், “உலகர் இயலறியார் உயலறியார் மயல் ஒன்றே அறிவார்” என உரைக்கின்றாள். கள் அருந்துவோர் அதனை மறைவாகச் செய்தலின், “கரவகத்தே கள்ளுண்டு மயங்கி நிற்கும் தருணம்” என்று கட்டுரைக்கின்றாள். கள்ளுண்டு மகிழ்பவர்க்கு இனிய கனி முதலியவற்றின் சுவை தெரிவதில்லையாதலால், “கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ” என்று கூறுகின்றாள். துரவு - வற்றாத நீர் பொருந்திய கிணறு. உரவகம் - திண்ணிய உள்ளம். (73)
|