5787.

     என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
          எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
     தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
          தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
     பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
          பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
     மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
          மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.

உரை:

     என்னுடைய ஒப்பற்ற தோழியே! நான் சொல்லும் இதனைக் கருத்தோடு கேட்பாயாக; அறிவு மயக்க வேண்டா; எல்லாம் செயல் வல்லவரும் என்னுடைய உயிர்த்தலைவருமாகிய சிவபெருமானுடைய அழகிய தோள்களை நான் தழுவிக் கூடும் பொழுது ஒப்பற்ற சிவசாக்கிரம் எனப்படும் இனிய நிலையாகும்; சொல்லப்படுகின்ற இந்தச் சிவசாக்கிர மலையைப் பரசாக்கிர நிலையாகக் கருதுதல் கூடாது; அப்பரசாக்கிரம் ஒடுங்கும் நிலை பதிப்பொருளாகிய சிவமாகும்; சிவத்தோடு கூடி ஆன்ம நிற்சத்தியின் தன்மை குன்றாமல் நான் கூறும் இந்த நிலை அவ்விரண்டும் கடந்த குருதுரியம் என்னும் பெரிய நிலை என்று மேனிலையில் இருந்து உணர்வாயாக. எ.று.

     ஞான உரையைக் கேட்கின்றாளாதலின் தன் தோழியை, “என்னுடைய தனித்தோழி” என்று சிறப்பிக்கின்றாள். தலைவியாகிய தான் சிவபிரானைக் கூடும் நிலைக்குச் சிவ சாக்கிர நிலை என்று பெயர் குறிக்கின்றாளாதலின், “சிவன் திருத்தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவசாக்கிரம் என்ற இனித்த நிலை கண்டாய்” என்று இயம்புகின்றாள். சிவசாக்கிரம் என்பது தூய இன்ப நிலை எனப் புலப்படுத்தற்கு, “இனித்த நிலை” என்று எடுத்துரைக்கின்றாள். பன்னுதல் - சொல்லுதல். சிவசாக்கிரத்துக்கு மேலதாகிய அவத்தை எல்லாம் தன்னுள் ஒடுங்க நிற்கும் பரசாக்கிரமாதலின் அதனை வேறாக உணர்தற்கு, “இந்த நிலை பரசாக்கிரமாக உணரேல்” என்றும். பரசாக்கிரமாவது சீவன் முழுதும் சிவத்தில் ஒடுங்கச் சிவம் ஒன்றேயாக நிற்பது என விளக்குதற்கு, “பகர் பரசாக்கிரம் அடங்கும் பதியாகும்” என்றும் பகர்கின்றாள். சிவ சாக்கிரம், பரசாக்கிரம் என்ற இரண்டுமின்றிச் சிவத்தோடு கூடிச் சீவன் தனது சீவ சிற்சத்தி ஒடுங்காமல் நிலைக்கும் அவத்தை குருதுரியம் என்பாளாய், “புணர்ந்து மன்னும் நிலை மற்றிரண்டும் கடந்த துரிய மாநிலை என்று உணர்க” எனத் தலைவி தோழிக்கு உபதேசிக்கின்றாள். மாநிலையை அவத்தை என்றும் கூறுவர். சீவ சிற்சத்தி ஒடுங்காது நிற்கும் நிலை எனத் தெரிவித்தற்கு, “புணர்ந்து மன்னும் நிலை” என்று புகல்கின்றாள்.

     (74)