5788.

     நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
          நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
     வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
          வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
     தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
          திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
     தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
          சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.

உரை:

     தோழி! நான் சொல்லுகின்ற இதனைக் கருத்துடன் கேட்பாயாக; என்னுடைய நாயகராகிய சிவனுடைய பொன் வண்ண அழகிய திருவுருவைக் கண்டு நான் கூடி மகிழும் காலத்தைத் தேவர்கள் புகழும் சுத்த சிவசாக்கிரம் என்று ஞானிகள் புகழ்ந்துரைக்கும் நன்னிலையாகும்; அவ்வுருவொடு கூடி அதுவதுவாய்க் கலந்து தேனிடத்துப் பொருந்திய சுவையோடு நல்ல மாணிக்க மணியிடத்துத் திகழும் ஒளியாய் ஒன்றுபட்டு இயல்பாகவே இன்பம் நிறைந்த சிவபோக நிலையாகும்; சொல்லப்பட்ட மூன்று நிலையும் கடந்த போகாவத்தை சாக்கிராதீதம் ஆகுமென உணர்ந்து கொள்வாயாக; எ.று.

     சிவத்தின் பொன் வண்ணத் திருமேனியோடு கலந்து மகிழும் அவத்தையைச் சுத்த சிவசாக்கிரம் என்று உயர்ந்தோர் உரைக்கின்றனர் என்பாளாய், “வான் புகழும் சுத்த சிவசாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலையாகும்” என்று கூறுகின்றாள். சிவத்தின் பொன் மேனியோடு சிவவொளி கலந்து இன்புறும் நிலை இத்தகையது என விளக்குதற்கு, “உருச்சுவை கலந்து அதுவதுவாய்த் தேன் கலந்த சுவையொடு நன்மணி கலந்த ஒளியாய் இயற்கை இன்ப வடிவாகிய சிவநிலை” என்று தெரிவிக்கின்றாள். தேன் சுவையும் மணி ஒளியும் அதுவாகிய தன்மையும் பிரித்துணர மாட்டாத நிலை என்பது விளங்க, “திரிபின்று” என்று செப்புகின்றாள். சிவத்தின் தனிப் பெருநிலையை, “இயற்கை இன்பச் சிவம்” என்று இயம்புகின்றாள். சிவசாக்கிரம், பரசாக்கிரம் சுத்த சிவசாக்கிரம் என்ற மூன்றும் கடந்தது சாக்கிராதீதம் என்பாளாய், “மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம்” என்று இயம்புகின்றாள். இதனின் வேறாகச் சாக்கிராதீதம் என்பது, “பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவிலாமைச் சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற சிற்பரம் அதனாலுள்ளச் செயலறுத் திடவு திக்குந் தற்பரமாகி நிற்றல் சாக்கிராதீதந்தானே” என்று (சிவப் - 80) உமாபதி சிவனார் கூறுவது காண்க.

     (75)