5789.

     இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
          எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
     எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
          எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
     கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
          கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
     செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
          சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.

உரை:

     தோழி! இவ்வுலகத்தில் உள்ளவர்கள் இரவுப் பொழுதில் தத்தம் கணவரோடு கூடுகின்றார்கள்; அதனை நான் எவ்வாறு எடுத்துச் சொல்வேன்; என்றாலும் நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; குற்றம் மிக்க இரவுக் காலத்தில் இருட்டறையில் அறிவுடைய மக்கள் குற்றம் சிறிதளவும் காணாமல் கள்ளை அளவின்றி உண்டுக் கண்களையும் கட்டி மறைத்துக் கொண்டு பிறர் பழி கூறக் கூடுகின்றார்கள்; அதனால் அவர்கள் சிறு சுகமும் காண மாட்டார்கள்; நான் செவ்வையாகக் காலைப் பொழுதில் என் கணவரோடு கூடுகின்றேன்; அப்பொழுதில் யாம் பெறும் சுகத்தை எடுத்துரைக்க வல்லவர் யாவர். எ.று.

     குற்றங்கள் செய்தற்கு ஏற்ற காலமாதலால் இருள் இரவை; “எவ்வமுறும் இருட் பொழுது” என்று உரைக்கின்றாள். இரவிலும் இருட்டறையில் கூடுவது மரபாதலால், “இருட்டறையில்” என்று எடுத்துரைக்கின்றாள். அறிவுடையவர்களாக இருந்து கள் உண்பதால் உண்டாகும் குற்றத்தை எண்ணாமல் அருந்துவது பற்றி, “அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி” என்று குறிக்கின்றாள். கள்ளைக் காம பாணம் என்று பெயரிட்டுக் கொண்டு கள்ளை அருந்துவதைப் பற்றி, “கள் அளவின்று அருந்தி” என்று கட்டுரைக்கின்றாள். அளவின்றி என்பது செய்யுளாதலின் அளவின்று என வந்தது. இருட்டறையில் கூடுகின்றாராயினும் பிறர் பழிப்பர் என்ற அச்சத்தால் கண்களையும் மூடிக் கொள்வது பற்றி, “கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார்” என்று கூறுகின்றாள். கணச் சுகம் - கணநேரத்து அனுபவிக்கும் இன்பம். காலை - ஒளி பொருந்திய நேரம். சேர் தருணச் சுகம் - சேரும் பொழுதில் பெறுகின்ற இன்பம். இரவுப் பொழுதில் பெறலாகும் காம இன்பமும் நான் சொல்லிய முறையில் கூறப்படுமாயினும் காலைப் பொழுதில் நான் பெறும் ஞான இன்பம் கூற வொண்ணாதது என்பாளாய், “தருணச் சுகம் புகல யார் தருணத்தவரே” என்று இசைக்கின்றாள்.

     (76)