5790. பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
உரை: தோழி; பொன்னைப் பறி என்று ஒரு கூட்டத்தார் மறைத்துச் சொல்வது போல் மகளிர் காலையில் தம் கணவரொடு கூடுதற்கு நாணுவர் என்று சொல்கின்றாய்; இளமை பொருந்திய தோழி, மெய்யன்பின் இயல்பு அறியாத பெண்களுக்கே நீ உரைப்பது பொருத்தமாய்த் தோன்றும்; ஆசை மீதூர்ந்த வழி நாணம் அறியாது என்ற உலக வழக்கினை நீ அறியாய் போலும்; நீ உண்மை இன்பத்தின் இயல்பறியா யாதலால் இவ்வாறு உரைக்கின்றாய்; இறைவனாகிய சிவபெருமானுடைய அழகிய திருமேனியைக் கண்டு கூடும் பொழுது துன்பமில்லாத காலைப் பொழுது என்றும் மாலைப் பொழுதென்றும் ஒன்றும் தோன்றுவதில்லை; எல்லாம் இன்பமாய் இலங்கும் என்று அறிவாயாக. எ.று.
ஒரு கூட்டத்தார் பொன்னைப் பறி என்று தமக்குள் கூறிக் கொள்வது வழக்கம். இதனை இலக்கண உரைகளில் ஆசிரியர்கள் கூறுவது காணலாம். மடவாய் - இளம் பெண்ணாகிய தோழி. பூவையர் - மகளிர். காமக் கூட்டம் ஒன்றையே அறிந்து இன்பத்தின் இயல்பறியாமை பற்றி உலகியற் போக மகளிரை, “அன்பறியாப் பெண்கள்” என்று குறிக்கின்றாள். சம்மதம் - இசைவு. இன்பம் சிவானுபவம் என அறிந்திலன் என்பதற்கு, “இன்பறியாய் ஆதலினால் நீ இங்ஙனம் இசைத்தாய்” என்று இயம்புகின்றாள். சிவபோகம் நுகருமிடம் பகல் இரவு அறியாத காலாதீத நிலை என்பாளாய், “இறைவர் திருவடிவது கண்டிட்ட தருணந்தான் துன்பறியாக் காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது” என்றும், “சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே” என்றும் வகுத்துரைக்கின்றாள். (77)
|