5791.

     அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
          அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
     இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
          எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
     தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
          செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
     அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
          அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.

உரை:

     தோழி! திருவருட் செல்வமுடையவரும், என்னைத் தனக்கு அடிமையாக உடையவரும், அம்பலத்தின்கண் ஞான நடம் புரியும் அழகரும், எல்லாம் செயல் வல்லவருமாகிய சிவபிரான் என்பால் வந்து என்னைக் கூடும் காலம் இருள் திணிந்த இராப் பொழுதின்கண் நிகழ்வதில்லை என அறிக; எவ்வாற்றால் என்னில் நான் கூறுகிறேன் கேட்பாயாக; இளம் பெண்ணே, தெளிவே உருவாய் அமைந்த என்னுடைய ஒப்பற்ற தலைவராகிய சிவபெருமானுடைய திருமேனியில் பொருந்திய சிவஞானப் பேரொளி சொல்லப்படுகின்ற நிலமாகிய தத்துவம் முதல் நாதமாகிய தத்துவ எல்லையைக் கடந்து அருள் மிகுந்த ஒப்பற்ற பரநாத எல்லையைக் கடந்து அப்பாலும் அதற்கப்பாலும் இடையில் ஒவ்வொன்றிலும் அகத்திலும் புறத்திலும் நிறைந்து விளங்குவதாம் என அறிக. எ.று.

     தனிப் பெருங் கருணையே உருவமாதலின், “அருளுடையார்” என்று எடுத்தோதுகின்றாள். இருட்கு இடம் இரவுப் பொழுதாகலின், “இருளுடைய இரவகத்தே” என்று இசைக்கின்றாள். தத்துவம் முப்பத்தாறனுள் முதற்படி நிலமாகிய தத்துவமாதலின் அதனை, “செப்புறு பார்” என்று தெரிவிக்கின்றாள். சுத்த மாயையின் மத்தகத்தில் நித்தமாய் இருப்பதாதலின், தத்துவங்கட்கு மேலதாகிய சிவ தத்துவத்தை, “நாத பரியந்தம்” என நவில்கின்றாள். பரநாதம் - மாயா தத்துவ எல்லை அப்பாலது; அதனால் அதனை, “பரநாத வெளி” என்று பகர்கின்றாள். தத்துவ எல்லைக்குள் அடங்கிய எல்லாவற்றினும் சிவவொளி நிறைந்து திகழ்வது விளங்க, “அகத்தும் புறத்தும் விளங்கும் நிறைந்தே” என்று புகல்கின்றாள்.

     (78)