5792. அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும் பொன்றாலே
படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
உரை: தோழி! நான் பாடித் தொடுக்கின்ற சொல் மாலையைக் கண்டு இதனை யாவர்க்கு அணியும் பொருட்டு இதனைப் பாடுகின்றாய் என்று என்னைக் கேட்கின்றாய்; தோழியே, அதன்கண் காரணத்தை நீ அறிந்திலை போலும்; இச்சொல் மாலையை அம்பலத்தில் எழுந்தருளும் தலைவராகிய சிவபெருமானுக்கன்றி வேறு யாவர்க்குத் தொடுத்தணிவேன்; இதனை அணிந்து கொள்ளும் சிறப்புடையவர் எவ்வுலகத்தில் யாவர் இருக்கின்றார்; நீயே சொல்லுக; இறுமாப்பினால் நீ இந்தச் சிறு சொல்லை என் செவி கேட்க உரைக்கின்றாய்; அதுதானும் என் செவியில் நெருப்பை நுழைத்தது போல உளது; உன்னுடைய மனமும் பேசும் நாவும் பல இயல்புகளை யுடைய தத்துவங்களால் ஆகாமல் இரும்பொன்றினாலே அமைந்தன போலும்; நீ என்னோடு நெருங்கிப் பழகின காரணத்தால் நான் பொறுத்துக் கொண்டேன் என்று அறிவாயாக. எ.று.
சொல் மாலை - பாமாலை. பாட்டுக்களை வரிசையாகப் பாடுவதும் பாடிப் பரவுவதும் பாமாலையாகும். என்னுடைய பாமாலையைப் படித்துணராமல் இது யாருக்காகத் தொடுக்கப்படுகிறது என்று தோழி கூறுவதைக் கொண்டெடுத்து மொழிகின்றாளாதலின் தலைவி, “யார்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி” என மொழிகின்றாள். இம்மாலை - இச் சொல்மாலை. எம்மான் - எங்கள் தலைவன். யான் தொடுக்கும் இச்சொல் மாலையை அணிந்து கொள்ளும் தகுதி யுடையார் சிவனையன்றி பிறர் ஒருவருமில்லை; பிறர் யாரும் இதனை அணியும் தகுதி யுடையவரும் அல்லர் என்பாளாய், “எம்மானுக் கன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளர் புகல் நீ” என்று தலைவி உரைக்கின்றாள். செம்மாப்பு - இறுமாப்பு. சிறுமொழி - குற்றம் பொருந்திய சொல். பழுக்கக் காய்ந்த இருப்பு நாராசத்தை இங்கே “தீ” என மொழிகின்றாள். ஆன்ம தத்துவம், கலா தத்துவம், சுத்த தத்துவம் எனப் பலவகையனவாதலால், “பன்மாலைத் தத்துவம்” என்று கூறுகின்றாள். நின்னுடைய மனமும் வாக்கும் இரும்பால் செய்யப்பட்டன போலும் என இகழ்கின்றமை புலப்பட, “இரும்பு ஒன்றாலே படைத்தது” என்று ஏசுகின்ற தலைவி தனக்குத் தோழியாய் இருக்கும் தன்மை பற்றி, “பழக்கத்தால் பொறுத்தனன் என்றறிக” என்று பகர்கின்றாள். (79)
|