5793. நாடுகின்ற பலகோடி அண்டபகிர் அண்ட
நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
உரை: தோழி, ஆராய்ந்தறியப்படுகின்ற கோடிக் கணக்கினவாகிய அண்டங்களிலும் பகிரண்டங்களிலும் வாழ்கின்றவர்கள் அனைவரும் அவ்வவ் வண்டங்களில் இருந்து அவற்றிற்குரிய தலைமை நிலையினை விரும்பி, நீடிய தேவர்கள் என்றும், மூர்த்திகள் என்றும், நித்தியர்கள் என்றும் ஆங்காங்கே இருந்து நிலைத்திருப்பதெல்லாம் அம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமானுடைய ஞானத் திருவடிகட்குத் தத்தம் தகுதிக்கேற்பச் சொன்மாலை பாடி அணிந்ததன் விளைவாகும்; நான் பாடுகின்ற பாமாலைகள் யாவும் பொன்னம்பலத்திற்கும் திருச்சிற்றம்பலத்திற்கும் உரிய பாட்டுக்களாகும் என்றறிக. எ.று.
சிவாகமங்களில் அத்துவப் பகுதிகளில் ஆராய்ந்து உரைக்கப்படுதலால் அண்டகோச அடுக்குகளை, “நாடுகின்ற பலகோடி அண்ட பகிரண்டம்” என்றும், அண்டங்கள் தோறும் சீவர்கள் உளர் என்பது பற்றி, “அண்ட நாட்டார்கள்” என்றும் கூறுகின்றாள். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குற்றிருக்கும் அண்டங்களை, “பகிரண்டம்” என்பர். நெடிது காலம் இருக்கின்றமை பற்றி அண்டவானர்களை, “நீடுகின்ற தேவர்கள்” என்று உரைக்கின்றாள். நாட்டாண்மை - நாடுகட்குத் தலைவராய் இருக்கும் தன்மை. மூர்த்திகள் - தெய்வ உருவுடையவர்கள். நித்தியர்கள் - என்றும் அழிவில்லாதவர்கள். இவர்கள் பலரும் தேவரானதும் மூர்த்திகளானதும் நித்தியர்களானதும் சிவத்தின் திருவடிகளுக்குப் பாமாலைகள் பாடியதன் காரணமே என்பாளாய், “இவர்கள் தங்கள் தங்கள் தரத்துக்கு ஆன வகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ” என்று தெரிவிக்கின்றாள். மேற்கூறிய அண்டவானர்களைப் போலின்றித் தான் சிவபோகம் ஒன்றே வேண்டிச் சிவத்தினுடைய பொன்னம்பலத்தையும் திருச்சிற்றம்பலத்தையும் பாடும் கருத்தினளாதல் விளங்க, “பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்பலப் பாட்டே திருச்சிற்றம்பல பாட்டே” என்று சொல்லுகின்றாள். (80)
|