5794.

     தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
          துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
     அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
          அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
     கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
          குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
     எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
          இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.

உரை:

     தோழி! இந்தச் சொல் மாலையை அழகிய அம்பலத்தில் நடிக்கும் தலைவராகிய எம்பெருமானுக்கு; அவரது தூக்கிய திருவடியாகிய மலர் போன்ற பாதத்துக்கு; தன்னை அன்பால் அடையும் அன்பர்களுக்கு அருள் வழங்கும் ஊன்றிய சிவந்த திருவடிக்கு; அவ்வடிகளில் அணிந்திருக்கும் அலங்கார ஆபரணமாகிய கழல்களுக்கு இச் சொல் மாலையைக் கொடுக்கின்றேனே அன்றி மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டேன்; அவர்களும் தமக்கெனக் குறித்து இதனை வாங்க மாட்டார்கள்; மேலும் அவர்களும் இச் சொல்மாலையை அணிந்து கொள்ளும் தகுதி உடையவராகார்; அடியார்களுக்கு அடையாளமாகிய மழுப்படையைக் கையில் எடுத்துக்கொண்டு சிற்சபையிலும் பொற்சபையிலும் எழுந்தருளும் தலைவராகிய சிவபெருமானே அன்றி என் சொல்மாலைக்குத் தலைவராவார் இல்லை என்று விளம்புகின்றேன். எ.று.

     மணிமன்று - அழகி்ய சபை. துரை - தலைவர். அம்பலத்தில் சிவபெருமான் ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கி ஆடுகின்றாராதலின் அவ்விரண்டினையும், “தூக்கிய கால் மலர்” என்றும், “ஊன்றிய சேவடி” என்றும் உரைக்கின்றாள். இரண்டு திருவடிகளிலும் உள்ள வீரகண்டை எனப்படும் கழல்களைப் பொதுவாக, “அலங்காரக் கழல்” என்று தெரிவிக்கின்றாள். சிவத் தொண்டர்கள் அடையாளமாக மழுப் படையை ஏந்துபவாதலின், “எடுக்கின்றேன் கையில் மழு” என்று இயம்புகின்றாள்.

     (81)