5795. நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
உரை: தோழி! நான் தொடுத்தணியும் இந்த மாலையைப் பூமாலை என்று கருதி நாட்டில் வாழும் மக்கள் தங்கள் முடியில் அணிந்து கொள்ள மாட்டார்கள்; தேவர்கள் தொடுத்தணியும் வேத மந்திரங்களாகிய மாலைகளையும் ஆகம வாக்கியங்களாகிய மாலைகளையும் முறையே வைதிகர்களும் ஆகமிகளும் தத்தம் மதங்களுக்கு உரியவை என்று அணிந்து கொள்ளுவார்கள் மானிட மக்கள் தொடுக்கும் மாலைகள் எல்லாம் தாம்தாம் விரும்பும் பரத்தையர் தோளுக்கு அணியும் மாலைகளாகும்; அவர்களின் வேறுபட்டுத் தனித்தொழுகும் என்னுடைய சொல்மாலை அருள் வழங்கும் ஞான சபையின் நடுவே நின்று நடித்தருளும் சிவனுடைய ஊன்றிய திருவடிகளே அன்றி வேறு எப்பொருளையும் கருதாமல் உயர்ந்தோங்குவதாதலால் அம்மாலை அத்திருவடிகட்கு உரியதாகும் என அறிக. எ.று.
நாட்டார்கள் என்பது இரண்டாவது அணிய மாட்டார்கள் என்ற பொருளில் வந்திருக்கிறது. வான் தொடுக்கும் மாலையாவது தேவர்கள் ஓதும் வேத மந்திரங்களின் வரிசை. ஆகமங்கள் என்பது ஆகமங்களை வோதும் ஆகமானுசாரிகளை என அறிக. அவர்கள் பலரும் பலவேறு மதக் கொள்கை உடையவராதலின் அது விளங்க, “மதத் துரிமையாலே” என்று மொழிகின்றாள். காமுகர்களாகிய மற்றவர்கள் தொடுக்கும் பூமாலையும் பாமாலையும் ஆகியவைதாம் காமுறும் பரத்தையர்க்கு ஆதலின், “தான் தொடுத்த மாலை யெலாம் பரத்தையர் தோள் மாலை” என்று சொல்லுகின்றாள். இனி மதத் துரிமையாலே தான் தொடுத்த மாலை யெலாம் பரத்தை தோள் மாலை என்பதற்கு, மதவெறி கொண்டு பாடப்படுகின்ற சொல் மாலைகள் யாவும் காமுகர் பரத்தையர்க்கு அணியும் தோள் மாலை என்று கருதப்படும் எனப் பொருள் கூறுவதுமுண்டு. ஊன்றி நின்ற சிவனுடைய திருவடிகளை, “ஊன்றெடுத்த மலர்கள்” என்று உரைக்கின்றாள். இனி ஊன்றியும் தூக்கியும் இருக்கும் திருவடிகளை ஊன்றெடுத்த மலர்கள் என உரைக்கின்றாள் எனினும் அமையும். அவற்றிற்கு எனற்பாலது சாரியை இன்றி அவைக்கு என வந்தது. (82)
|