5796. வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
உரை: தோழி! பெருமை பொருந்திய அழகிய அம்பலத்தின்கண் திருநடனம் புரியும் அருள் வள்ளலும் எல்லாம் செயல் வல்லவருமாகிய சிவபெருமான் தாமே சொற்களாகிய மலர்களை எடுத்து எனக்குக் கொடுக்க நான் வாங்கி அவற்றைச் சொல் மாலையாகத் தொடுக்கின்றேன்; இம்மாலையைத் தலைவர் எனப்படும் வேறு தேவர்கள் அணிந்து கொள்ள மாட்டார்கள்; அணிந்து கொள்ளும் தகுதி உடையராகார்; தேனிடத் தமைந்த இனிய சுவை போல என் உள்ளத்தில் இனிமைச் சுவை தந்து திருக்கூத்தினை ஆடிக் காட்டுகின்ற அவருடைய திருவடிக்கே என்னுடைய இந்தச் சொல் மாலை உரியதாகும்; அடியவளாகிய யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டுமன்று; என்னுடைய உயிர் உடல் பொருள் ஆகிய மூன்றையும் மனமிசைந்து நல்கும் பரிசுகளாகும் என அறிக. எ.று.
வான் - பெருமை. மணிமன்று - அழகிய சிற்றம்பலம்; உயரிய மணிகள் இழைத்த அம்பலம் எனினும் அமையும். தாம் தொடுக்கும் சொல் மாலைக்குரிய சொல்லையும் பொருளையும் சிவபெருமானே வழங்குகின்றார் என்பாளாய், “நன்மலர் எடுத்து என் உளத்தே தான் கொடுக்க நான் வாங்கித் தொடுக்கின்றேன்” என்று தலைவி கூற்றில் வைத்து வடலூர் வள்ளற் பெருமான் உரைக்கின்றார் என உணர்க. அவர் கொடுத்த சொல்லையும் பொருளையும் கொண்டு நான் தொடுக்கும் சொல் மாலையை அணியும் தகுதி அவருடைய திருவடிக்கு உண்டாதலின் பிறர் ஒருவரும் அணியும் தகுதி அவருடைய திருவடிக்கு உண்டாதலின் பிறர் ஒருவரும் அணியும் தகுதி உடையவராகார் என்பது கருத்து. இச்சொல் மாலையைத் தொடுக்கும் இடத்துத் தாம் பெறுகின்ற சிவானந்தத்தை, “தேன் கொடுத்த சுவை போல தித்தித்து என்னுளத்தே திருக்கூத்து காட்டுகின்ற திருவடி” என்று சிறப்பிக்கின்றாள். அவர் கொடுத்த பரிசாகிய சொல் மலர்களைக் கொண்டு மாலையாகத் தொடுத்து தாம் அணிவதைப் பரிசாகக் கொடுக்கின்ற வள்ளற் பெருமான் அதனோடு நில்லாது தம்முடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் தம்முடைய பரிசாக அளிக்கின்றார் என்பது இதனால் விளங்குகின்றது. (83)
|