5797. என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
உரை: தோழி! யான் தொடுத்தணியும் சொன்மாலை மாத்திரமன்று வேறு யாவர் தொடுத்தணியும் மாலையாயினும் அது இறைவராகிய சிவபெருமானே இலக்கியமாகக் கொண்டு பாடுவதாயின் அம்மாலைகள் பலவும் சிவனுக்குரிய நன்மாலைகளாகும்; அச் சொல்மாலைகட்கே நான் அடிமையாய் பலகாலம் வணக்கம் செய்கின்றேன்; வேறு சிலர் புன்மைத் தன்மை பொருந்திய பலவாகிய பாட்டுக்களைப் பாடுகின்றார்கள்; அவை என் செவியில் பொய்ம்மொழி புகுந்து வருத்துவது போல் புகுந்தோறும் கொடிய தன்மையை யுடைய துன்பத்தைத் தருகின்றன எனின் ஞான சபையின்கண் அன்பர்கள் புகழ நின்றாடுகின்ற அப்பெருமான் செவிக்குப் பொருந்தாது காண். எ.று.
இலக்கியம் - பாட்டுடைப் பொருள். அப்பாட்டினை உச்சி மேற்கொண்டு ஓதி உய்வேன் என்றற்கு, “நான் அடிமை தந்தனன்” என்றும், “பல்வந்தனம் செய்கின்றேன்” என்றும் கூறுகின்றாள். பரமாந் தன்மை யில்லாத பிறவற்றைப் பொருளாகக் கொண்டு பாடுகின்றார் என இகழ்தற்கு, “புன்மாலை பலபலவாப் புகல்கின்றார்” என்று தலைவி கூறுகின்றாள். புன்மாலை - கீழ்மைத் தன்மைகள் உடைய பொருள்கள் நிறைந்த பாட்டுக்களாகும். வன்மாலை - நோய் - மிக்க துன்பத்தை விளைவிக்கும் மனவருத்தம். மன்றாடி பதம் - அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானுடைய திருவடி. (84)
|