5798. உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
உரை: தோழி! யான் வணங்குதற்குரிய பெருமை பொருந்திய ஒப்பற்ற தலைவரும், ஓங்குகின்ற நாதாந்தம் முதலிய அறுவகை அந்தங்களின் உள்ளும் புறத்தும் அப்புறத்தும் ஒப்பற்ற அருட் செங்கோல் செலுத்துகின்ற துரிய நிலை முதல்வரும், அத்துரிய நிலையையும் கடந்த இன்ப வடிவினரும், அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற சித்தருமாகிய சிவனுடைய திருவடி நிழலே பெரிய பெரிய சாலோகம் முதலிய பதங்களில் உள்ள தலைவர்கள் எல்லாரும் நின்றொழியும் நிலையமாகும்; இதனை ஒரு பெண்ணாகிய நான் சொல்லுகின்ற சொல் எனக் கருதி இகழ்கிறாயோ இகழாது கொள்ளுகிறாயோ, என்னவோ அறியேன்; உணர்தற்கரிய பெரிய ஞானப் பொருள் நிறைந்த வேதங்களும் ஆகமங்களும் உரைக்கின்ற ஆணை மொழியும் இவ்விடத்து இதுவேயாகும்; இதன்கண் சந்தேகம் இல்லை என அறிக. எ.று.
மறந்தும் பிற தெய்வங்களை நினையாத தன்னால் வணங்கப்படும் தலைவராதல் பற்றிச் சிவனை, “உரிய பெருந் தனித்தலைவர்” என்று உரைக்கின்றாள். சடாந்தமாவன : நாதாந்தம், கலாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்ற ஆறுமாம். சாக்கிரம், சொப்பனம், சுளுத்தி என்ற மூன்றிற்கும் மேற்பட்ட நிலை துரிய நிலை எனப்படும். சிவயோகிகட்கு ஆங்கே புலப்படுதலால் சிவபெருமானை, “ஒரு செங்கோல் செலுத்தும் துரியர்” என்று புகழ்கின்றாள். நாதாந்தம் முதலிய ஆறினுள்ளும் கலந்தும் அவற்றிற்கு அப்பால் நின்றும் ஓங்குவது பற்றி, “ஓங்கு சடாந்தத்தின் உட்புறத்தும் அப்புறத்தும் செங்கோல் செலுத்தும் துரியர்” என்று விளக்குகின்றாள். துரிய நிலைக்கு அப்பாலும் அதீதத்தில் இன்ப மயமாய் இலங்குவது விளங்க, “துரியம் கடந்த சுக சொருபர்” என்று சொல்லுகின்றாள். சாலோகம், சாமீபம், சாரூபம் முதலிய பதங்களை, “பெரிய பதம்” என்று உரைக்கின்றாள். இனிப் பெரிய பதம் என்பதற்கு இந்திரன் முதலிய இறையவர் பதங்களை எடுத்துரைத்தலும் உண்டு. இப்பதத்திற்கு மேலே சிவசாயுச்சியம் அல்லது வேறு இல்லாமை பற்றி, “தலைவர் எலாம் நிற்கும் நிலை” என்று முடிந்த முடிபாக மொழிகின்றாள். பெண்உரை - பேதமை பொருந்திய பெண்ணின் பேச்சு. எல்லா வேதங்களும் ஆகமங்களும் சிவசாயுச்சியமாகிய திருவடி நிழலையே சிறப்பித்துப் பேசுவது பற்றி, “அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கோர் ஐயம் இலை அறியே” என்று அறிவிக்கின்றாள். (85)
|