5799.

     மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
          மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம் காண் குவரோ
     சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
          சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
     பதம்அறியா இந்தமத வாதிகளோ சிற்றம்
          பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
     கதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
          தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

உரை:

     அமுதம் போன்ற மொழிகளைப் பேசும் தோழியே! மதம் எனப்படுகின்ற குற்றமாகிய பேயால் பீடிக்கப்பட்டு அலைகின்றவர் எல்லாரும் அம்பலத்தின்கண் சிவபெருமான் ஆடுகின்ற பெரிய நடனத்தைக் காண வல்லவராவரோ; என்றும் வாழலாம் என்று இருக்கின்றவர்களும் வருகின்ற துன்பத்தை அறிகின்றிலர்; சாவாத பெருநிலைக்குரிய கல்வியைக் கற்றுக் கொள்ளும் தகுதியும் இவர்கட்கு இல்லை; சிவஞான நிலையை அறியாத இந்த மதவாதிகள் சிற்றம்பலத்துச் சிவநடனம் கண்டு உய்தி பெற்ற என்னை இகழ்வது சிறு சொற்கள் சிலவற்றைச் சொல்லுகின்றார்கள் என மொழிகின்றாய்; அன்று நீ சிவனைப் பற்றி எனக்குச் சொன்ன வார்த்தைகளையே இப்பொழுது அவர்கள் தோத்திரமாக ஆங்காங்குச் சொல்லத் தொழுகின்றார்கள்; அதனை நீ காண்பாயாக. எ.று.

     அறுவகைக் குற்றங்களில் ஒன்றாதலின் மதத்தை, “பேய்” என்று உருவகம் செய்கின்றார். அறுவகைக் குற்றங்களாவன; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன. செருக்கினால் உண்மையறியாத கீழ்மக்களை, “மதமெனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றார்” என்று பேசுகின்றார். மாநடம் - ஞான நடனம். சதம் எனவே இருக்கின்றார் - எப்பொழுதும் இன்று போலவே வாழலாம் என்று எண்ணி இருப்பவர். படுவது துன்பம்; அதுபட்டே தீருவது பற்றி, “படுவது” எனக் குறிக்கப்படுகின்றது. சாகாத கல்வி - சாகாமைக்கு ஏதுவாகிய சிவஞானம் நல்கும் கல்வி. “வேதங்கள் முக்கியம் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லி இருக்கின்றன” என்றும், “தேவர் குரலில் முதலதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லி யிருக்கிறது; அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்” என்றும், உபதேசப் பகுதி கூறுகின்றது. தரம் - தகுதி. பதம் என்றது சிவஞான பதமாகிய சிவபதம்; சிவத்தின் திருவடி ஞானம் எனினும் ஒக்கும். சில புகலுதல் - இகழ்ந்த சொற்கள் சிலவற்றைப் பேசுதல். சுதை - அமுதம். சொல்லின் இனிமைபற்றி, “சதை மொழி” என்று தோழியைச் சிறப்பிக்கின்றாள். சிவத்தை இகழ்ந்து பேசியவர்களே பின்னர்த் தெளிவுற்றுப் போற்றித் துதிப்பாராயினர் என்றற்கு, “அன்று நீ சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காண்” என்று தலைவி சொல்லுகின்றாள்.

     (86)