5800. எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
உரை: மான் போலும் கண்களை யுடைய தோழியே! எவ்வுலகில் உள்ள எத்தகைய மக்களுக்கும் அரிய பெரிய சோதி உருவாகிய சிவபெருமானே தலைவர் என்பதை அறியாமல் இந்தப் பல்வேறு மதங்களைக் கொண்ட வாதிகள் பழிக்கப்படுகின்ற பிறவிக் குருடர்கள் யானையைக் கண்டு தம்மில் பூசல் புரிந்த கதை போலச் சாகாமைக்கு ஏதுவாகிய கல்வியின் இயல்பை அறியாமையால் பல கதைகளைக் கூறுகின்றார்கள்; நீயும் இவ்வாறே சிலர் பலவற்றைப் புகல்கின்றார்கள் என்று சொல்லுகின்றாய்; நான் அச்சிவத்தினுடைய ஞான நடனத்தைக் கண்டு அவர் காட்சியில் எய்தும் மெய்ம்மையான அருட்டேனாகிய அமுதத்தை உண்டுச் செம்மை பொருந்திய சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து கொண்டேன்; அதனால் பிற மதவாதிகள் சொல்லுகின்ற தீய மொழிகளும் எனக்கு இனிய மொழிகளாயின காண். எ.று.
நவ்வி - மான். எல்லா வுலகங்களிலும் உள்ள உயிர்கள் பலவற்றிற்கும் சிவபெருமானே அருட் பெருஞ் சோதி வடிவினராய் இறைவராய் விளங்குகின்றார் என்ற உண்மையை அறியாமல் பலவேறு மதவாதிகள் தமக்குத் தோன்றியவாறே தம்மிற் பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பாளாய், “எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெருஞ் சோதியரே இறைவர் என்பதறியாதே இம்மதவாதிகள் பேசுகின்றார்கள்” என்று கூறுகின்றாள். இம்மதவாதிகளின் கூற்றை விளக்குவதற்குப் பிறவிக் குருடர்கள் கூடிக் கொண்டு யானை ஒன்று நின்றவிடத்துச் சென்று அதன் உடல் முழுதும் தடவிப் பார்த்து யானையாவது உரல் போல்வது என்றும் முறம் போல்வது என்றும் சொல்லிக் கலகம் விளைவித்துக் கொண்ட கதையை எடுத்தோதலுற்று, “கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலக் கதைக்கின்றார்” என்று சொல்லுகின்றாள். பிறவிக் குருடர்களின் சொல்லையும் செயலையும் கேட்டு உலகினர் இகழ்வது உண்மையின் அவர்கள் நிகழ்ச்சியை, “கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை” என்று குறிக்கின்றாள். கதைக்கின்றார் - கண்டபடிப் பேசுகின்றார். ஞான நடனக் காட்சி இன்பமயமாய் விளங்குவதலின், “ஞான நடம் கண்டேன் மெய்த்தேன் அமுதம் உண்டேன்” என்று தலைவி மொழிகின்றாள். தீயவை பலவற்றையும் நல்லனவாகக் கொள்ளுதல் சமரச சன்மார்க்க சங்கத்தின் கொள்கையாதலால், “செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்” என்று சாற்றுகின்றாள். மதவாதிகள் இகழ்ந்து பேசிய தீய சொற்களையும் தான் இனிய சொற்களாக ஏற்றுக்கொண்டமை புலப்பட, “அதீதமொழியும் தேமொழியாயின” என்று செப்புகின்றாள். சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து கொண்டதினால் வேறு மதவாதிகள் பேசிய தீய சொற்களைத் தான் இனிய சொற்களாகத் தலைவி ஏற்றுக் கொண்டாள் என அறிக. (87)
|