5801. பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
உரை: தோழி! மிக்க பெரும் அருளுடையவரும் அம்பலத்தின் கண் நடித்தருளும் பெருந்தகையும் எனக்குக் கணவருமாகிய சிவ பெருமானுடைய திருப்பெயரைச் சொல்லுக என்று என்னைக் கேட்கின்றாய்; நான் சொல்லுகின்றேன் கேட்பாயாக; அவர்க்கு அருகர் புத்தர் முதலியன திருப்பெயர் என்று சொல்லுவேன்; அவர் பெயரை அயன் என்பது என்று உரைப்பேன்; நாராயணன் என்று சொல்லுவேன்; அரன் எனப்புகல்வேன்; ஆதிசிவன் என்றும் கூறுவேன்; ஞானமாய்ப் பருகப்படுகின்ற சிவமென்றும் சத்திசிவம் என்றும், பரமம் என்றும், பிரமம் என்றும், பரப்பிரமம் என்றும், ஞானத்தால் துருவக் காணப்படுகின்ற பிரமம் என்றும், துரிய நிறைவு என்றும், சுத்த சிவம் என்றும் சொல்லுவேன்; இவை யாவும் அவர் நல்கும் ஞான விளையாட்டுக்கள் என அறிவாயாக. எ.று.
அருளே திருவுருவாக அமைந்தவராதலின் சிவபெருமானை, “பெருகிய பேரருள் உடையார்” என்று உரைக்கின்றாள். அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை - ஞான சபையில் திருக்கூத்தாடி அருளும் பெரிய தகுதி படைத்த சிவபரம்பொருள். அருகர் - சினேந்திரர். புத்தர் - புத்த சமயத் தலைவர். ஆதிசிவன் - அரன், திருமால், அயன் முதலிய மூவர்க்கும் முன்னோனாகிய சிவன். சதாசிவ மூர்த்தம் இன்ப ஞான வடிவாய் விளங்குவதால் அதனை, “பருகு சதாசிவம்” என்று குறிக்கின்றாள். சத்தியும் சிவமுமாய்ப் பிரிவின்றிக் கூடியிருத்தல் தோன்ற, “சத்திசிவம் என்பேன்” என உரைக்கின்றாள். பரமம் - மேலான பொருள். பிரமம் - பிரமவாதிகள் கூறும் தலைவர். பிரமத்தினும் மேலதாகப் பேசும் வாதிகள் மேலான பிரமப் பொருளை, “பரப்பிரமம்” என்பர். ஞான நாட்டம் உடையவர்கள் நுணுகி உணரும் பிரமப்பொருளை, “துருவு சுத்தப் பிரமம்” என்று கூறுகின்றனர். சிவயோகிகளுக்குத் துரியாவத்தையில் நிறைவுறக் காணப்படுவது பற்றிச் சிவத்தை, “துரிய நிறைவு” என்பர். இவ்வாறே சுத்த சிவஞானிகள் சிவபரம்பொருளை, “சுத்த சிவம்” என்பர். பரம்பொருள் ஒன்று உண்டென்று கருதும் பரஞானிகளின் பேச்சு வகைகளாதலால் இவற்றைத் தலைவி, “இவை சித்து விளையாட்டே” என்று தெரிவிக்கின்றாள். (88)
|