5807. நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம் உரைப் பதுவே.
உரை: தோழி! நான் பசித்த பொழுதெல்லாம் தானும் பசித்தார் போல இனிய ஞானவமுதத்தை அளித்து வருத்தத்தைத் தருகின்ற பசியைப் போக்கி எனது ஊனுடம்பின்கண் உள்ள மானத தேகத்தில் தம்முடைய இரண்டாகிய திருவடியை ஊன்றி அருளி எனக்குப் பயமின்மையைத் தந்தருளினார்; அதனோடு தேவர்கட்கு அரசனாகிய இந்திரன் முதலிய தேவர்களுக்கும் கிடைப்பதற்கரியவரும் ஞான சபையில் நடித்தருளும் என் கணவருமாகிய சிவபெருமான் என்னைக் கூடித்தந்த புறப்புணர்ச்சிக் காலத்தில் அவருடைய பொன் வடிவத்தை நான் பெற்று மகிழ்ந்தேன்; நானும் அவரும் உள்ளத்தோடு உள்ளமாய் ஒன்றிப் புணர்ந்த உள்ளப் புணர்ச்சியின் உயர்வு வாயால் உரைக்கப்படுவதன்று. எ.று.
ஊனுடம்பின் உள்ளே இருப்பதாதலால் தனது உள்ளமாகிய தேகத்தை, “ஊன் பதித்த என்னுடைய உளம்” என்று உரைக்கின்றாள். திருவடிப் பதிவால் மரண பயம் நீங்கிச் சாகாநிலை எய்துவது பற்றி, “உபய பதம் பதித்தருளி அபயம் எனக்களித்தார்” என்று தலைவி உரைக்கின்றாள். புறப்புணர்ச்சியாவது தேகமும் தேகமும் பொருந்தக் கூடுவது. அக்காலை தனக்கு எய்தியது இறைவனுடைய பொன் வடிவம் என்பாளாய், “பொன் வடிவம் தனை அடைந்து களித்தேன்” என்று இசைக்கின்றாள். அகப்புணர்ச்சியாவது மானசீகப் புணர்ச்சியாகும். அந்நிலையில் மெய்யும் வாயும் செயலற் றொழிதலால் அவ்வகப் புணர்ச்சி இன்பத்தில் உயரிய நிலையை உரைத்தற்கில்லை என்பாளாய், “ஏற்றம் உரைப்பதுவே” என மொழிகின்றாள். உரைப்பதுவே என்பதிலுள்ள ஈற்றேகாரம் எதிர்மறை. (94)
|