5808. துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும்க ணவர்
மருவிடப்பொற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
உரை: தோழி! நுண்ணிதாகிய பரசாக்கிர நிலையையும் பரம சொப்பன நிலையையும் சுழுத்தி நிலையையும் கண்டு கொண்டேன்; பின்னர் பெரிதாகிய பிரம சாக்கிரத்தையும் பிரம சொப்பனத்தையும் பிரம சுழுத்தியையும் கண்டு கொண்டேன்; இவற்றிற்கெல்லாம் மேல் உள்ளதாகிய பெரிய துரியத்தில் சிவதரிசனம் பெற்றுச் சமரச சன்மார்க்கத்தைக் கூடினேன்; அவ்விடத்தே திருவருள் ஞானக்கூத்தினை ஆடி யருளும் என் கணவராகிய சிவ பரம் பொருளைக் கூடி அவருடைய பொன் வடிவம் பெற்று நான் சிவமாகி ஆங்கு எய்தும் நிகரற்ற இன்ப வாழ்வில் வாழ்கின்றேன். எ.று.
தூல உடம்பில் ஆன்ம இலாடத்தானத்தே இருந்து காணும் சாக்கிர நிலையிலும் நுண்ணிதாகிய காட்சி பரசாக்கிரம் எனப்படுகிறது. அது நுணுகிக் காணும் இயல்புடைமை பற்றி, “துருவு பரசாக்கிரம்” எனப்படுகிறது. சாக்கிரத்தின் மேலதாய் சாக்கிரக் காட்சியிலும் பெரியதாய் விளங்குவது பற்றிப் பரசொப்பனத்தை, “பரம சொப்பனம்” என்றும், அதற்கு மேலதாய் விளங்கும் சுழுத்தியை, “பரம சுழுத்தி” என்றும் குறிக்கின்றாள். நுண்ணிய பரசாக்கிரத்தினும் பெரிதாகிய சாக்கிரம் துவாத சாந்த நெறியில் தோன்றுவது பற்றி அதனை, “குரு பிரம சாக்கிரம்” என்றும், “பிரமம் குலவிய சொப்பனம்” என்றும் உரைக்கின்றாள். குரு - பெருமை பொருந்தியது. பிரம சாக்கிரமும் பிரம சொப்பனமும் உபசாந்தத்தில் காணப்படுவன என யோக நூல்கள் கூறுவதால் அவ்விரண்டையும், “பிரம சாக்கிரம்” எனவும், “பிரமம் குலவிய சொப்பனம்” எனவும் உரைக்கின்றாள். சிவயோகம் வல்லார்க்கு அன்றி விளங்காமையால் இங்கே அவற்றை விளங்க உரைக்க முடியவில்லை. மாயாதீதப் பெருவெளிக்கு மேலுள்ள உபசாந்தப் பெருவெளியில் பிரமசுழுத்தி உணரப்படும் என்று யோக நூல்கள் கூறுகின்றன. அதற்கு மேல் உள்ள துரியத்தானம் சிவாகாசம் எனவும் சிவவியோமம் எனவும் யோக நூலார் தெரிவிப்பது பற்றி அவற்றை, “சிவ சுழுத்தி” எனவும், “சிவ துரியம்” எனவும் வள்ளற் பெருமான் குறித்தருளுகின்றார். அவற்றின் யோகானுபவம் இவ்வுரைகாரருக்கு இல்லை யென அறிக. சிவதுரியம் கூடின பிறகே ஆன்ம சிற்சத்தியாகிய தலைவி சமரச நெறியை எய்தினாள் என்பது விளங்க, “சமரச சன்மார்க்கம் கூடினேன்” என்றும், அதன் பின்னரே அவள் சிவமாயினாள் என்பது புலப்பட, “சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருட் கூத்தாடும் கணவரும் மருவிடப் பெற்று அவர் வடிவம் நானானேன்” என்றும் உரைக்கின்றாள். சிவபோகானுபவ வாழ்வைத் தாம் பெற்றமை தெரிவிப்பாளாய், “எதிர் அற்ற வாழ்க்கையில் களித்து வாழ்கின்றேன்” என கூறுகின்றாள். (95)
|