5809.
தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
உரை: தோழி! ஒப்பற்ற சிவசாக்கிர நிலையில் தனித்திருந்த நான் சிவசொப்பனம் பெற்று இனிமை மிக்க சிவசுழுத்தியில் இன்புற்றுச் சிவவொளியில் கலந்து கொண்டேன்; பின்னர் சுத்த சிவதுரிய நிலையில் அதுவதுவாய்த் தோற்றக் கேடின்றி எல்லாமாய் அல்லதுமாய் விளங்கும் சுத்த சிவதுரியாதீதத்தை எய்திச் சிவமாய்ச் சிவத்தில் நிறைந்து இருக்கின்றேன்; இன்பமயமான ஞான சபைத் தலைவராகிய சிவபரம் பொருளைப் பெற்ற தன்மையினால் இவ்வுலகில் இருந்து பேசுகின்றேன் என்று தலைவி உரைக்கின்றாள். எ.று.
சுத்த சிவசாக்கிரம், சுத்த சிவசொப்பனம், சுத்த சிவசுழுத்தி, சுத்த சிவதுரியம், சுத்த சிவதுரியாதீதம் என்ற இவ்வைந்தும் சிவஞான சிவயோகம் பெற்றார்க் கன்றி விளங்காது என அறிக. சாக்கிரம் முதலிய ஐந்தும் உடம்பொடு கூடிய உயிர்க்கு நாளும் நிகழும் அவத்தைகளாயினும் உடம்பின் நீங்கிச் சிவயோக நெறியில் சிவ ஐக்கியம் பெற்றாலன்றி இனிது விளங்குதற்கு வழி இல்லை. சிவமாகிய ஆன்மா மாயா மயக்கம் நிறைந்த உலகில் இராதாகலின், “இனிப்புறு சிற்சபை இறையைப் பெற்ற பரிசதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன்” என்று தலைவி தோழிக்கு வெளிப்பட உரைக்கின்றாள். செனிப்பிலது - தோற்றம் இல்லாதது. (96)
|