5811. புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
உரை: தோழி! என் கணவராகிய சிவபரம்பொருள் சிவஞானத் திருவுருப் பெற்ற என் உருவொடு கூடிய புறப்புணர்ச்சிக் காலந்தான் நான் சிவஞானப் புத்தமுதம் உண்டுப் பூரித்திருந்த காலமாகும்; என் உள்ளமும் அவரது உள்ளமும் ஒன்றிச் சிறப்புடைய ஞான உணர்வு மயமாய்க் கூடியிருந்த அகப்புணர்ச்சியை அப்பெருமான் எனக்குத் தந்தருளிய காலத்து விளங்கிய சுகானுபவத்தை நான் எவ்வாறு சொல்வேன்; அந்நிலையில் என்பால் பிறப்புணர்ச்சியும் இல்லை இந்திரிய உணர்ச்சியும் இல்லை; சுத்த சிவானந்தப் பெரும் போகத்தில் விளையும் பெரிய சுகம் ஒன்றே பெருகி எங்கும் நிறைந்து நான் அதுவாகவும் அது என் மயமாகவும் ஞான மயமாய் அந்த ஞானத்தின் மயமாய் விளங்கிய நிலை எனலாம். எ.று.
சுகானுபவத்தைச் செப்புவது எப்படியோ என்று சொன்ன தலைவி ஒருவாறு உரைக்கலுறுகின்றாளாதலின், “பெருஞ் சுகந்தான் பெருகி எங்கும் நிறைந்து நான் அதுவாய்” என்றும், “அது என் மயமாய்” என்றும், “சின்மயமாய்” என்றும், “தன்மயமாய்” என்றும் பலப்பட விளம்புகின்றாள். புறப்புணர்ச்சி தூலம் என்றும், அகப்புணர்ச்சி சூக்குமம் என்றும் நுண்ணிதின் வேறுபடுத்திக் கொள்ளல் வேண்டும். புறப்புணர்ச்சி உருவப் புணர்ச்சியாதலின், “புத்தமுதம் உண்டு” என்றும், “பூரித்த தருணம்” என்றும் புகலுகின்றாள். சிறப்புணர்ச்சி - சுத்த சிவஞான உணர்வு. பிறப்புணர்ச்சி உளதாகுமிடத்து விடய உணர்ச்சிக்கு இடம் ஏற்படுதலின், “பிறப்புணர்ச்சி விடய நிலை” என்று கூறுகின்றாள். பிறப்புணர்ச்சியும் விடய உணர்ச்சியும் மறப்புணர்ச்சியாகலின் அதனை வற்புறுத்த, “மறப்புணர்ச்சி இல்லாதே” என்று உரைக்கின்றாள். (98)
|