5813.

     அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
          ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
     செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
          திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
     பிறியாமல் என்உயிரில் கலந்துகலந் தினிக்கும்
          பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
     அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
          அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.

உரை:

     தோழி! என்னின் நீங்காமல் என் உயிரில் ஒன்றிக் கலந்து இனிமை செய்யும் பெருந்தகைவராகிய நடராசப் பெருமான் அறிவறியாத எனது இளம் பருவத்தில் என்பால் தானே வலிய வந்து என்னை அழைத்து ஞானக் கூத்தியற்றும் தமது திருவடிக்கு யான் பாடல்கள் செய்யுமாறு பணித்தருளினார்; அடக்கமில்லாத மனதையுடைய சிறியவளாகிய யாம் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் தமது அருள் விளையாட்டு என ஏற்றுக் கொண்டு எனக்கு மணமாலை அணிந்தார்; என்னையும் கூடினார்; அருளுருவாகிய ஞான மூர்த்தியான அப்பெருமான் யான் தனது அருளில் கலந்து மறைந்தொழியாமல் ஓங்குமாறு அவர் எனக்கு அருளியது புறப்புணர்ச்சியாகும்; அகப்புணர்ச்சியின் இயல்பு உரைக்கும் அளவில் அடங்குவதன்று காண்; அது உரைக்க வொண்ணாதது என்றறிக. எ.று.

     உள்ளதன் உண்மையை உள்ளவாறு அறியலாகாத இளம் பருவத்தை, “அறியாத பருவம்” என்று குறிக்கின்றாள். மிக்க இளம் பருவத்தேயே தனது திருவடியே நினைந்து பாடும் தகுதியை எனக்கு அருளினார் என்பாளாய், “ஆடல் செய்யும் திருவடிக்கே பாடல் செயப் பணித்தார்” என்று பகர்கின்றாள். பணித்தார் என்பது ஈண்டு அருளினார் என்னும் பொருட்டு. ஒரு வழியே நிற்றலின்றிப் பொறி புலன்களின் வழியாகப் பலதலையாய்ப் பிரிந்தோடும் மனத்தை, “செறியாத மனம்” எனவும், செறிவில்லாத மனம் சிறுமையே உண்டு பண்ணும் என்பது பற்றி, “மனச் சிறியேன்” எனவும், அம்மனத்தால் பிழைகளே மலியுமாதலால், “செய்த பிழை எலாம்” எனவும் தெரிவிக்கின்றாள். விளையாட்டாகச் செய்வது எல்லாம் பிழையாகக் கருதப்படாமல் விளையாட்டெனப் புறக்கணிக்கப்படுவது பற்றி, “திரு விளையாட்டு எனக் கொண்டு திருமாலை அணிந்தார்” என்று உரைக்கின்றாள். உயிரோடு கலந்த வழி இறைவன் மீளப் பிரிவதில்லை என்பது தோன்ற, “பிரியாமல் என் உயிரில் கலந்து” என்றும், கலக்குந் தோறும் இன்பம் பெருக்குவது புலப்பட, “கலந்து கலந்து இனிக்கும் பெருந்தலைவர்” என்றும் பேசுகின்றாள். முன்பாட்டில் “புறப்புணர்ச்சித் தருணம் தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவானேன்” என்றாளாதலால், ஈண்டும் “அருளாம் அறிவாளர் புறப்புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது” எனத் தலைவி வற்புறுத்துகின்றாள். இவ்வாறே அகப்புணர்ச்சியைச் “சொல்வது எப்படியோ” என்று இயம்பினாளாதலின் அதனை, “பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு” என்னும் தருக்க வன்முறை பற்றி, “அகப்புணர்ச்சி அளவு உரைக்கலாமே” என்று அறிவிக்கின்றாள்.

     (100)