143
143. சத்திய வார்த்தை
அஃதாவது, உண்மை மொழிதல். தாம் உரைப்பன
வனைத்தும் இறைவனுடைய அருளாணையில் நிகழ்வன என உரைப்பதாம்.
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5814. சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமூகத்தே
நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
எவன்அ வன்திரு வாணைஈ திளைத்தனன் இனித்துயர் அடையேனே.
உரை: சிவம் என்னும் பெயர்க்கு உண்மைப் பொருளாய் நிகழப் பெறும் எல்லாச் செயல் வகைகளையும் தன்னுடைய திருமுன்பே ஒன்பதின் மறைந்துள்ள பெரிய தேவர்கள் செய்தொழுக ஞானமாகிய அழகிய சபையின்கண் தவஞானம் நிறைந்த முனிபுங்கவர்கள் நின்று போற்றிசைக்க ஆனந்தத் திருக்கூத்தினை ஆடி யருளுகின்ற பெருமான் எவரோ அவருடைய அருளாணையாக இதனைச் சொன்னேனாதலால் யான் இனித் துன்பம் சிறிதும் அடையேன். எ.று.
சிவம் என்னும் சொல் சிவபரம்பொருள் இடமாக நிகழ்வது என்பது இனிது விளங்க, “சிவமெனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி” என இயம்புகின்றார். இலக்கியம் - சொற்பொருள். நவம் நிறைந்த பேர் இறைவர்கள் - ஒன்பதாய் உள்ள தேவர்கள். இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவன் அருளால் நிகழ்வனவாதலின், “எச்செயலும் தன் சமூகத்தே நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட” என எடுத்துரைக்கின்றார். அவ்வொன்பதின் மறையும் சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், ஈசன், உருத்திரன், மால், அயன் என்பர். இவர்களின் உண்மை நிலையை, “நவம்தரு பேதம்” எனச் சிவஞான சித்தியார் (இரண்டாம் சூ 74) கூறுகின்றது. ஞான மாமணி மன்று என்பது ஞான சபையைக் குறிப்பதாம். இறைவனது ஆனந்த நடனம் நிகழும்போது பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலிய முனிசிரேட்டர்கள் போற்றித் துதிப்பதால், “தவம் நிறைந்தவர் போற்றி ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்” என்று கூறுகின்றார். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற திருவாசக சிவபுராணம் மொழியுமாறு தான் இத்திருவருட்பாவைப் பாடியதாக வடலூர் வள்ளற் பெருமான் வழுத்துகின்றாராதலால், “ஆனந்தத் தனிநடம் புரிகின்றான் எவன் அவன் திருவானை ஈது இசைந்தனன்” என்றும், இதனால் வரும் நலம் தீங்குகள் யாவும் அவனது திருவாணைக் குரியனவாதலால், “யான் இனித் துயர் அடையேன்” என்றும் உறுதியாகக் கூறுகின்றார். (1)
|