144. சத்திய அறிவிப்பு
அஃதாவது, பெரும் பதியாகிய சிவபெருமான் எழுந்தருளும் உண்மைச் செய்தியைத் தெரிவிப்பதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5815. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயம்இலை ஐயம்இலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
உரை: தலைவனாகிய சிவபரம்பொருளின் திருவருள் வருகின்ற தருணம் இதுவாகும் என்பதை உலகத்து நன்மக்களே நீங்கள் காண்பீர்களாக; நான் சொல்வதில் சிறிதும் சந்தேகம் இல்லை; அப்பெருமான் திருவடி மீது ஆணையாகச் சொல்லுகின்றேன்; மெய்ம்மை யுருவினனும், என்னை ஆட்கொண்ட ஞான மூர்த்தியும், ஞான சபையில் விளங்குகின்ற சித்தனும், எல்லாம் வல்ல ஒப்பற்ற விமலனும், தூயவனும், அருளுருவாகிய பெருஞ் சோதியை யுடைய துரிய நடம் புரிகின்ற நாதனும், சுகமாகிய அமுதத்தை உடையவனும், எனக்குத் தலைவனும் ஆகிய சிவபெருமான் இங்கே அமர்ந்திருந்தருளுதற்கு நிலவுலகில் அவனுடைய திருக்கோயிலை மணிகளாலும் பொன்னாலும் மலர்களாலும் காண்போர் வியக்கும்படி விரைந்து அலங்கரிப்பீர்களாக. எ.று.
ஐயன் - தலைவன். அவர் எழுந்தருளும் காலம் இதுவென ஒருவரும் அறியாமை பற்றி அதனை வற்புறுத்தற்கு, “ஐயமிலை ஐயமிலை ஐயன் அடி ஆணை” என்று உரைத்தருளுகின்றார். வித்தகன் - ஞானமே திருவுருவாக உடையவன். சிற்சபை - ஞான சபை. சித்தன் - சிந்தையே இடமாகக் கொள்பவன். விமலன் - இயல்பாகவே மலசம்பந்தம் இல்லாதவன். அவனுடைய பெரிய சோதி தண்ணிய அருள் மயமானது என்பதற்கு, “அருட் பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார். சிவயோகிகள் கண்டு களிக்கும் ஞானக் காட்சியில் துரியத்தானத்தே ஞான நடம் புரிபவன் என்பது பற்றி, “துரிய நடநாதன்” என்று சொல்லுகின்றார். யோகிகளின் தேகத்தின் உந்தித்தானமாகிய துரிய நிலையை, “ஞான நிலை” என்பராதலால், “திருக்கோயில்களில் சிவன் எழுந்தருளும் மூலட்டானத்தை, “துரியத்தானம்” எனச் சிவாகமங்கள் உரைப்பதும் உண்டு. அப்பெருமானுடைய திருவருள் ஞானத்தை அமுதம் என்பது பற்றி, “சுக அமுதன்” என்று புகழ்கின்றார். திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் பொருட்டு எழுந்தருளுகின்றானாதலின் அதனை “மணியும் பொன்னும் மலர்களும் கொண்டு அலங்காரம் செய்மின்” என்று விளம்புகின்றார். (1)
|