5816. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகலத்தீர் கேண்மின்
இனித்தநறும் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தம்எனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
உரை: தனிப் பெருந் தலைமைத் தன்மையையுடைய பெரும் பதியும், எனக்குத் தந்தையும் ஆகிய சிவபெருமான் என்பால் எழுந்தருளுகின்ற தருணம் இதுவாகும்; உலகத்து நன்மக்களே இது சத்தியமான உரையென்று கேட்பீராக; இனிக்கின்ற நன்மணம் கமழும் பழம் போன்று என் உள்ளம் தித்திக்குமாறு இனிய ஞானவமுதத்தை எனக்குத் தந்து ஏழுலகத்தவரும் போற்றுமாறு மனித உடம்பாகிய இதனை அழியாத் தன்மை யுடைய பொன் உடம்பாக்கி நிலைத்த சித்திகளையும் எல்லாம் செயல் வல்ல வன்மைகளையும் கொடுத்து முதிர்ந்த சிவானந்தம் எனப்படும் பெரிய யோகத்திலே நான் இனிது மகிழ்ச்சி அடைய என்னை வைத்தருளும் காலமும் இதுவாகும். எ.று.
சிவபரம்பொருளுக்கு மேல் தனித்துயர்ந்த பொருள் வேறே இன்மை பற்றி அதனை, “தனித் தலைமைப் பெரும் பதி” என்று சாற்றுகின்றார். தான் கூறுவதன் மெய்ம்மையை வற்புறுத்தற்கு, “இது சத்தியம் காண் சகலத்தீர் கேன்மின்” என்று மொழிகின்றார். இறைவன் திருவருள் அமுதம் இனிக்கின்ற கனியின் மணமும் கொண்டு விளங்குவது என்று தெரிவிப்பாராய், “இனித்த நறுங் கனி போன்றே இன்னமுது அளித்து” என்று இயம்புகின்றார். அருளமுதின் சுவை உள்ளத்தால் உணரப்படுவது பற்றி, “என் உளம் தித்திக்க” என்றும், உலகம் ஏழு என்பது பற்றி, “ஏழு உலகமும் போற்ற” என்றும் எடுத்துரைக்கின்றார். தமது பூகப் பரிணாமமாகிய உடம்பு அழியா நிலைமையதாகிய பொன் உடம்பாக்கி அருளுவர் என்பாராய், “மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பாக்கி” என்று உரைக்கின்றார். அழியா வாய்மை - அழியாத நிலைமை. சித்து - அணிமா, மகிமா முதலிய எண்வகைச் சித்திகளையும் சித்து என்பர். சித்துக்களையும் எல்லாம் செய் வல்லமையும் தமக்குக் கொடுத்தருளித் தம்மைச் சிவானந்தம் என்னும் பெரும் போகத்தில் அழுந்த வைப்பார் என்றும், அதற்குரிய காலம் இதுவாகும் என்றும் தெளிவாகக் கூறுகின்றார். (2)
|