5817.

     சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
          சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
     இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
          இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
     சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
          தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
     செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
          திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

உரை:

     தோழி! இது மெய்ம்மை மொழியாதலால் நான் எடுத்துரைக்கின்றேன் என அறிவாயாக; இதன்கண் உனக்குச் சந்தேகம் வேண்டா; இச்செய்தியைக் கேட்டு நீ மகிழ்ச்சி கொள்வாய்; இன்றைய தினமே அருட் சோதியை யுடைய அப்பெருமான் நம்பால் வந்தருளும் நாளாகும்; இனிமேல் வரும் நாட்கள் எல்லாம் இன்பம் பொருந்திய நாட்களாகும்; சுத்த சிவ சன்மார்க்க நெறியே எங்கும் விளங்கும்; எல்லா உலகங்களும் தூய்மையை அடையும்; நீ சொன்ன சொற்கள் யாவும் உண்மையாகும்; செத்தவர்கள் உலகில் எழுந்து உலகெங்கும் திரிந்து மகிழ்வார்கள்; திருவருட் செங்கோல் எங்கும் பரந்து இன்பம் செய்யும். எ.று.

     அருட்சோதி ஆண்டவன் எழுந்தருளும் நாள் “அந்நாள்” எனத்தெளிய வுணர்ந்து உண்மையெனத் தெளிந்து உரைப்பது விளங்க வடலூர் வள்ளல், “இத்தினமே அருட் சோதி எய்துகின்ற தினமாம்” என வற்புறுத்துகின்றார். இனி வரப் போகின்ற நாட்கள் யாவும் இன்பமுறு தினங்களாம் என்று கூறுகின்றாராதலால் அவற்றின் இயல்பை, சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் என்றும், எல்லா உலகமும் தூய்மை யுறும் என்றும், செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார் என்றும், திருவருட் செங்கோல் எங்கும் செல்லும் என்றும் தெரிவிக்கின்றார். இவ்வுண்மைகளைச் சோதித்தறியும் திருவருள் ஞான வன்மை இல்லாமையால் உலகில் பலர் இன்னும் ஐயத்திலேயே இருக்கின்றனர்.

     (3)