5818. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
உரை: தோழி! எனக்குத் தலைவரும், துரையும், என் உயிர்க்கு நாயகனும் ஆகிய சிவபெருமான் இன்று நான் இருக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்திருக்கின்றார்; பின்னே வருகின்ற இரண்டரை நாழிகைக்குள் எனது இப்பெரிய உடம்பில் புகுந்து கலந்தருளி என்னை விட்டுப் பிரியாமல் இருந்தருளுவார்; தன் இனத்தவரான சிவத் தொண்டர்களின் தவப் பயனால் நான் உணர்ந்து இதனை அறிந்து உனக்கு உரைக்கின்றேன்; இது முக்காலும் உண்மையாகும்; மின்னலைப் போலும் இடையை யுடைய இளமங்கையாகிய உனக்கு என் சொல்லின் உண்மை இரண்டரை நாழிகை கடந்த பின்பு விளக்கமாய்த் தெரியும். எ.று.
இத் திருப்பாட்டு எழுந்த இடமும் காலமும் யாவராலும் குறிக்கப்படாமையால் விளக்கம் காண இயலவில்லை. சிவானந்தம் எனும் பெரும் போகத்தில் அழுந்திய நாளில் நடந்திருக்குமோ என இதனைப் படிக்கும் உள்ளம் நினைக்கின்றது. இரண்டரை நாழிகை என்பது திருவருட் பேற்றுக்கு அமைந்த நாளில் காலைப் பொழுதில் இரண்டரை நாழிகை அளவில் இருக்கலாம். (4)
|