பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


113


    "மிக்கவுப . . . அறிந்தேன்" - மிகுந்த துணையாகப் பேசாதிருக்கும் பெரியவரும் விளக்கி ஓதியருளியவையும் இவையே! எந்நாளும் நிலையான நல்ல குருவாக நண்ணியவர்களும் தொகுத்துரைத்தருளிய வழிவகைகளும் இவைகளேயல்லாமல் வேறில்லையென்று அடியேன் நன்றாக அறிந்துள்ளேன்;

    "அறிந்தபடி . . . புகலாய்" - அடியேன் அங்ஙனம் அறிந்தபடி நிலை நின்றொழுகி இன்பநலம் எளியேன் எய்தாவண்ணம் (அதன் மறுதலையாகிய துன்பத்துடன்) இந்நிலையை எய்தினேன். (அமைந்திருந்து எண்ணிப்பார்க்கு மிடத்து) அதுவும் நின் திருவருளென்னவே (மெய்ந்நூற்கல்வியினை எய்யா விழைவுடன்) கல்லாத அறிவில் வறிஞனாகிய அடியேன் உணர்வினுள்ளே உணர்த்தியருளினை; திருவடிப்பேற்றினுக்கு வழிவகை யாது என்று புகன்றருள்வாயாக.

        "கருதரிய . . . கடவுளே" -

     (வி - ம்) அடிமை - அறிவுடைய உயிர்கள். உடைமை - அறிவில்லாத உலகியற்பொருள்கள். வியாபி - எங்கும் நிறைந்த பொருள். இருக்கு - மந்திரம். வேதம் - மறை. உபகாரம் - துணை. வறிஞன் - நுண்ணுணர்வில்லா நொய்யன். கதி - திருவடிப்பேறு.

    ஆருயிர்களின் அடிமையுண்மை வருமாறு :

"சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை
 நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
 முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
 அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே."
- 4. 40 - 8.
"கானார் புலித்தோ லுடைதலைஊண் காடுபதி
 ஆனால் அவனுக்கிங் காட்படுவா ராரேடீ
 ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும்
 வானாடர் கோவும் வழியடியார் சாழலோ."
- 8. திருச்சாழல், 12.
    ஆண்டவன் செயல் அனைத்துமென்னும் மெய்ம்மை வருமாறு :

"ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே
    அடங்குவித்தா லாரொருவர் அடங்கா தாரே
 ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
 பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
 காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே."
- 6. 5 - 93.