பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


130


    சித்திகள் எட்டென்ப. அவை வருமாறு :

    1. அணிமா, 2. மகிமா, 3. கரிமா, 4. இலகிமா, 5. பிராத்தி, 6. பிராகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம்.

"அணிமா மகிமா கரிமா விலகிமா
 பிராத்தி பிராகாமிய மீசத்துவம் வசித்துவமென்
 றோதற் கரிய அட்டமா சித்தி"
- பிங்கலம், 418.
(1)
பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப்
    பாரினிடை வரவழைப்பீர்
  பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
    பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
    கேட்டுப் பிழைப்போரையுங்
  கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு
    கேணியிடை குறுகவைப்பீர்
ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக
    ஒளிவிடும் பொன்னாக்குவீர்
  உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே
    உலகுசுமை யாகவருளால்
மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல்
    மெழுகாக்கி வைப்பதரிதோ
  வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர்கணமே.
     (பொ - ள்) "பாட்டளி . . . . . . வைப்பீர்" - இன்னிசைப் பாட்டைப் பண் இயைய முரலும் வண்டுக் கூட்டங்கள் நெருங்கி வளர்கின்ற (வேண்டுவார்க்கு வேண்டுவன கற்பித்துக் கொடுக்கும் தன்மையால் தெய்வ வுலகத்திலுள்ள) கற்பக மரத்தினது நல்ல நிழலினை இந் நிலவுலகத்திற்கு வரும்படியாக வரவழைக்கும் ஆற்றலுடையீர், தாமரைச் செல்வமும், சங்கச் செல்வமும் (நும்முடைய) குற்றேவலர் போன்று இருபக்கத்திலும் நின்று நின் மொழிவழிக் கேட்டவற்றை வரையாது கொடுத்துவரும்படி நீங்காது நிற்கவைப்பீர்;

    "பிச்சை . . . . . . . . . யாக்குவீர்" - (பசிநோய் தின்ன வெயிலென மடியாது மழையெனத் தவிராது பிச்சை எடுத்துண்டுழலும் மிக்க வறுமையரையும், முடிசூடி உலகாளும்படி என்ன ராக்குவிப்பீர்;