சயமிகு தாரணை தியானஞ் சமாதி | அயமுறு அட்டாங்க மாவது மாமே. - 10. | 534. |
இதன் விரிவனைத்தும் தனித்தமிழ் ஆகமமாகிய இத் திருமந்திரத்தின்கண் கண்டு கொள்க.
(5)
கெசதுரக முதலான சதுரங்க மனவாதி | கேள்வியி னிசைந்துநிற்பக் | கெடிகொண்ட தலமாறு மும்மண்டலத்திலுங் | கிள்ளாக்குச் செல்லமிக்க | தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச் | சிங்காச னாதிபர்களாய்த் | திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை | திகழ்ந்திட வசந்தகாலம் | இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம் | இதயமேற் கொள்ளும்வண்ணம் | என்றைக்கு மழியாத சிவராச யோகராய் | இந்தராதி தேவர்களெலாம் | விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு | இருக்குநும் பெருமைஎளிதோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |
(பொ - ள்) "கெசதுரக . . . அதிபர்களாய்" - யானை, குதிரை, தேர், காலாள் எனச் சொல்லப்படும் (வேந்தற்குரிய) நால்வகைப்படைகளும் (அகத்தவ வேந்தராகிய உங்கட்கு) எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் அகக்கருவிகள் நான்கும் (நீங்கள்) இட்ட வேலையைத் தட்டாமல் அவ்வப்பொழுது முட்டின்று செய்யும் ஏவலர்கள் போன்று இணங்கி நிற்கவும், மிக்க சீர்த்திபெற்றுள்ள (மூல முதலாக நெற்றிப் புருவம் ஈறாகச் சொல்லப்படும்) ஆறு ஆதாரங்களிலும், மூன்று மண்டலத்தும் உங்களுடைய கிள்ளாக்கு என்று சொல்லப்படும் ஆணை செல்லவும், பத்துவகையாகச் சொல்லப்படும் அகவொலிகள் (உலகாள் வேந்தற்கு முழக்கப்படும் பல்லியங்கள் போன்று) முழங்கவும், அரியணைமீது ஆர்வமுடன் அமர்ந்திருக்கும் முதல்வர்களாய்;
"திக்கித் . . . எளிதோ" - திசைகளும், திசைகளின் முடிவுகளும், முழுநிலாத் திங்கட்குடையானது ஒளிதந்து விளங்கும்படியும், இளவேனிற் பருவமும் இயைந்துவரவும், மலரின்கண் மருவியிருக்கும் நறுமணம் போன்று எண்ணிலா இன்பம் இனியவுள்ளத்தின்கண் நனிமிக