பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


145


 
கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
    குணமொன்றும் ஒன்றிலேன்பால்
  கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
    குணங்களெத் தனைகொடியபாழ்ங்
கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
    கள்ளமெத் தனையுள்ளசற்
  காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
    கதிக்கென் றமைத்த அருளில்
செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
    செல்வதெத் தனைமுயற்சி
  சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
    தேகத்தில் வாஞ்சைமுதலாய்
அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
    யானேன் இவைக்கும்ஆளோ
  அண்டபகி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.
     (பொ - ள்) "கொல்லாமை . . . அருளில்" - (ஒன்றாக நல்லதாகிய ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகச் சொல்லப்படும் எவ்வுயிரையும்) கொல்லாமை என்று சொல்லப்படும் சிறந்தகுணம் அளவில்லாத தீயகுணங்கள் வந்தணுகாமல் அகற்றும்; (அத்தகைய சிறந்த) குணம் ஒன்றும் பொருந்தும் இயல்பில்லாத அடியேன்பால் கொடுமைகள் எத்தனை, ஒருசார் கோடலாகிய தீமைகள் எத்தனை, (நினைக்கவும் நடுக்கந்தரத் தக்க) இரக்கமற்ற தன்மைகள் எத்தனை, கொடியனவும், பாழ்படுதற்கேதுவும் ஆகிய கல்லாமை எத்தனை, (ஆணவ மேலீடெனப்படும்) அகங்காரம் எத்தனை, (அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்) மனத்தின்கண் எழும் குற்றங்கள் எத்தனை, மெய்ம்மையான நற்செய்திகளைச் சொன்னாலும், அறியாமையாகிய தீக்குணங்கள் எத்தனை, திருவடிப் பேற்றினுக்குத் தகுதியாக்கி வைத்தருளப் போந்த திருவருளில்;

    "செல்லாமை . . . ஆளோ" - அத் திருவருட் குணங்களில் செவியும், மனமும் செல்லாமை எத்தனை, பயனில்சொல் பாராட்டும் வீண் கூட்டம் என்றாலோ (பெருவேட்கையுடன் ஓடோடியும்) செல்லுவதெத்தனை, அழிவுபாட்டினையுடைய கண்கட்டு வித்தைபோன்ற இப்பொய்யுடலில் நீங்கா ஆசை முதலாகப் பொருந்தாத பண்புகள் எத்தனை இவ்வேழைபால் வைத்தனை. (மெய்ம்மையாக) உனக்கு மீளா ஆளாகிய அடியேன் (மேலே கூறிய) பொருந்தாக்கொள்கைக் குணங்கட்கும் அடிமையாவனோ? (ஆகேன் என்பதாம்.)